சிங்கப்பூர் : "பணியிடங்களில் வரும் மறைமுக இம்சைகளால் அதிக கோபம் கொள்வோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருப்பதாக' ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் பல்கலையின் சார்பில் "ஸ்ட்ரெஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற அமைப்பு, இரண்டாயிரத்து 755 பணியாளர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இவர்களில், பெரும்பாலோனோர் 1992 லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் பாதிக்கப்படவில்லை. ஆனால், 47 பேர் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் ஏளனமாகக் கருதப்படுவது அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவது தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் வந்துள்ளது. அதை மாற்றும் வழி தெரியாததால் அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.
பணியிடங்களில் வரும் பிரச்னைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது. பணியிடங்களில் பிரச்னை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-