தொடுபுழா : முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு நடத்தி வந்த சர்வே பணிகளை வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பெரியாறு ஆற்றின் மீது முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு பழமை வாய்ந்தது என்றும், அதன் உறுதித் தன்மை குறைந்து விட்டது என்றும், அணைக்கட்டு உடைந்தால் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் மாநில அரசு கருதியது.இந்நிலையில், தமிழகத்திற்கு மேலும் நீர் கிடைக்க வசதியாக, அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல், அங்கு புதிய அணை கட்ட மாநில அரசு முடிவெடுத்தது. இதற்காக, அப்பகுதியில் பத்து கி.மீ.,சுற்றளவுக்கு நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.அதில், மாநில அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஏழு கி.மீ., நிலப்பகுதி யில் சர்வே பணிகள் முடிவடைந்து விட்டன. புதிய அணைக்காக அங்கு மத்திய அரசுக்குச் சொந்தமான பெரியார் டைகர் வனப்பகுதியில், 3 கி.மீ., சுற்றளவுக்கு 2.5 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான சர்வே பணிகளுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து, அக்டோபர் மாதம் 19ம் தேதி அங்கு சர்வே பணிகள் துவங்கின. சர்வே பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து விட, கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார்.சர்வே பணிகள் அங்குள்ள வனத்துறையினரின் ஆதரவோடு துவங்கியது. இரு மாதங்களை எட்டும் நிலையில், பெரியார் டைகர் வனப்பகுதியில் சர்வே பணிகளை நிறுத்தி வைக்க, அங்குள்ள வனத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து, வனத்துறையினர் அங்கு சர்வே நடத்த அனுமதி மறுத்து பணிகளை நிறுத்தி விட்டனர்.தொடர்ந்து, மாநில நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் ராதாமணி இந்நிலையில் அங்கு சர்வே பணிகளை தொடர இயலாது என, மாநில அரசுக்கு தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பணிகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.அரசுத் துறைகளில் இரு துறைகளுக்கு இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக, சர்வே பணிகள் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வெட்கக்கேட்டை களையும் வகையில், அதற்கான பரிகாரங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.