-
Monday, February 1, 2010
தமிழன் என்று பெருமை பேசுவதைத் தவிர, தமிழ்ப்பண்பாடு காக்கப்படுகிறதா?
தேர்தல் ஆணையத்தின் விழாவில் கலந்துகொள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்ளச் சென்றதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்ததும் தமிழ்நாட்டில் வாதங்கள் அருமைஅருமையாக வெளியாகின்றன.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பதறிப்போய் உடன் அறிக்கை விடுகின்றனர். ஆமாம், அது இயல்பான மரியாதைச் சந்திப்பு, வேறொன்றும் இல்லை, கூட்டணி திமுகவோடுதான் தொடர்கிறது என்று.வள்ளுவருக்குக் கோட்டம் கட்டிய முதல்வரை வாழ்த்துகிறோம். குமரியில் சிலை வைத்த முதல்வரை வணங்குகிறோம். ஆனால், அவர் வழியில் நாம் நடக்கிறோமா?வடக்கே சோனியா காந்தியும், அத்வானியும் சந்தித்துக் கொள்வார்கள். உடனே காங்கிரஸ் தலைவர்களோ, பாரதிய ஜனதா தலைவர்களோ கூட்டணியில்லை என்று அறிக்கை விட்டுக் கொள்ள மாட்டார்கள்.தனியாக நின்றால் டெபாசிட் வாங்கச் சக்தியற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் பயம் அபாரம்.ஜெயலலிதா எங்கேயும் சொல்லவில்லை. அவர் தெளிவாகச் சொல்லுகிறார். மரியாதை கருதி இருவரும் வணங்கியதாகத் தில்லித் தலைவர்களும் சொல்லிவிட்டார்கள். இவர்கள் ஏன் பதறுகிறார்கள்?நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாவைக் கடுமையாக விமர்சிக்கின்ற லாலுவை, பாரதிய ஜனதா தலைவர்கள் யாரும் பகையெனக் கருதுவதில்லை. எங்கு சந்தித்தாலும் புன்னகையோடு தான் பழகுகிறார்கள். அவரும் அப்படித்தான்.பாரதிய ஜனதாவைக் கொள்கை அளவில் கடுமையாக எதிர்க்கின்ற பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதிய ஜனதாவினரும் பகைமை பாராட்டிக் கொள்வதில்லை.பொது நிகழ்வுகளில், விருந்துகளில் மிகமிக மகிழ்ச்சியோடு கலந்துகொள்கின்றனர்.நாடாளுமன்றக் கட்டடத்தைத் தீவிரவாதிகள் தாக்கியபோது அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியவர் சோனியா காந்திதான். வடநாட்டில் அரசியல், மேடையோடு முடிந்துவிடும். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியான நமது தமிழ்நாட்டில் தான் பகைமை, பகைமை, பகைமை.1967 தேர்தலில் வெற்றிபெற்றவுடன் அண்ணா ஒரு புதிய மரபைத் தோற்றுவித்தார். ஆமாம் ... காமராஜரை வீட்டில் சென்று சந்தித்தார். பக்தவத்சலத்தைச் சென்று சந்தித்தார். அவரின் ஆழ்ந்தகன்ற கல்வி, அவருக்கு அந்தச் சிறந்த பண்பைத் தந்திருந்தது.ஆனால், இன்று பண்பாட்டில் நாம் மிகமிகக் குறுகிப்போனோம். அதில் ஜெயலலிதாவின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மாற்று இயக்கத்தவர்களின் வீட்டுத் திருமணத்துக்குக் கூடப் போக அஞ்சுகின்றனர், அம்மாவுக்குப் பிடிக்காது என்று.முதல்வரோ அவரையல்ல, அரசைவிமர்சித்தவுடன் யாரையும் கடுமையாக விமர்சித்துவிடுவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன் அரசைவிமர்சித்தார். உடன் அவரோடு நிறுத்தாமல், வெள்ளை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, கைகளிலும் கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்டு தெருத்தெருவாக ஜீவானந்தம் அழைத்துச் செல்லப்பட்ட கொடுமையைக் கண்டதால் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மறைந்த பாலதண்டாயுதத்தைக் கொச்சையாக விமர்சித்தார்.ஒரு பெண் சம்பந்தப்பட்டதால்தான் பாலதண்டாயுதம் கொலை வழக்கு என்றார்.நாகர்கோவில் இடைத் தேர்தல் பிரசாரத்தில் பெரியவர் சின்ன அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். ராஜாஜி என்றுதான் சின்ன அண்ணாமலை வாய் திறந்தார். மேடையில் இருந்த காமராஜர், சின்ன அண்ணாமலையின் சட்டையைப் பிடித்து இழுத்து, ""அவர் யார்? நீ எப்படி அவரைப் பற்றிப் பேசலாம்?'' என்று தடுத்தார்.ஆனால், காமராஜர் தமிழ்நாட்டின் மேடைகளில் விமர்சிக்கப்பட்டார். காமராஜர் என்ன மெத்தப் படித்தவரா என்பார்கள். காமராஜர் ஒரு முறை, ""ஏப்பா நான் எங்கேயாவது படிச்சிருக்கிறேன்னு சொன்னனா?'' என்று கேட்டார்.அண்ணா உடல் நலமற்றிருந்தபோது மருத்துவமனைக்கு ஓடோடிப்போய் அவருக்கு நோய் என்ன என்று உடனடியாகக் கண்டுபிடிக்க வைத்தவர் காமராஜர்.ராஜாஜி, மருத்துவமனையில் இருந்தபோதும் காமராஜர்தான் ஓடிப்போய் பார்த்தார். ராஜாஜி மறைந்தபோது மயானம் வரை தனது சக்கர நாற்காலியில் வந்து அவருக்கு இறுதி மரியாதையைக் கண்ணீரோடு செலுத்தியவர் பெரியார்.எங்கே இந்தப் பண்பாடுகள் இன்று?சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பெண் வந்து உரை நிகழ்த்துகிறார். அமைச்சர்கள் பண்பாடு காக்கலாமே? சட்டபேரவைத் தலைவர் அவரது வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டுவது போலப் பேரவைத் தலைவர் நடந்துகொள்ளலாமா?அவர் தவறாகப் பேசுகிறார் என்றால், அதை மறுப்பதில் தனி நபர் தாக்குதல்கள் இல்லாமல் இருக்கலாமே? சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவார். எதிர்ப்புக் குரல்கள் எழும். இழிவான பேச்சுகள் எழாது.லாலுவின் பேச்சில் கடுமையான கிண்டல்கள் இருக்கும். பாரதிய ஜனதாவினரே சிரித்து ரசிப்பார்களே தவிர கடுமையான அசிங்கமான தாக்குதல்கள் இருக்காது.வடக்கு, பண்பாட்டில் வாழ்கிறது. உலகுக்கே பண்பாட்டைக் கற்றுத் தந்த தமிழர்கள் பண்பாட்டில் தேய்ந்து போனது ஏன்?அரசு குறித்துப் பேசினாலே தனி நபர் விமர்சனம் சரியா? காமராஜர் ஒரு முறை நெல்லையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலே பேசுகிறபோது சொன்னார், அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, ""காமராஜர் ஏன் என்னைக் கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறார்'' என்று கேட்டதற்குக் காமராஜர் சிரித்துக் கொண்டே சொன்னார். "" என்ன செய்ய, எனக்கு நீங்கள்தானே முதல்வர். நானும் உங்க குடை நிழலில் தானே இருக்கிறேன்னார்''.தமிழன் என்று பெருமை பேசுவதைத் தவிர, தமிழ்ப்பண்பாடு காக்கப்படுகிறதா? யாருமே தங்கள் அரசை விமர்சிக்கக்கூடாது என்பதும், யாருமே தனது அரசியலை விமர்சிக்கக்கூடாது என்கிற எதிர்க்கட்சித் தலைவரும், யார் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் எங்களைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடாதீர்கள் என்று கதறும் தேசிய இயக்கமும் உள்ள மாநிலத்தில்,""தமிழனென்று சொல்லடாதலை நிமிர்ந்து நில்லடா'' என்றவரிகள் ஊராட்சி மன்றப் பலகைகள் தோறும் மின்னுகின்றன. அரசியல் பண்பாட்டில்இன்றோ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது.