Tuesday, February 2, 2010

இசைத்துறையின் உயரிய கெளரவம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்


இசைத்துறையில் உலக அளவில் மிக உயரியதாகக் கருதப்படும் "கிராமி' விருதுகளில் இரண்டைப் பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.​ "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

​ இசைத்துறையில் அரிய சாதனைகளைச் செய்தவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகாதெமி ஆப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' அமைப்பு,​​ 1958}ம் ஆண்டு முதல் "கிராமபோன்' விருதுகளை வழங்கி வருகிறது.​ இந்தப் பெயர் நாளடைவில் மருவி "கிராமி' எனப் பெயர் உருமாற்றம் பெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 52}வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திரைப்பட இசைப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த "ஸ்லம்டாக் மில்லியனர்' படம்,​​ இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.​ இதில் சிறந்த பின்னணி இசை,​​ சிறந்த பாடல் என இரண்டு பிரிவுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

முதல் தமிழர்:​​ கிராமி விருதுகளை வென்ற முதல் தமிழர் மற்றும் நான்காவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் 44 வயதான ஏ.ஆர்.ரஹ்மான்.​ இதற்கு முன்பு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் மூன்று முறையும் ​(1967,​ 1972,​ 2001),​ தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் ஹுசைன் ​(1992,​ 2009) இரண்டு முறையும் வீணை இசைக் கலைஞர் விஸ்வ மோகன் பட் ஒரு முறையும் ​(1994) கிராமி விருதுகளை வென்றுள்ளனர்.

​ "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக கடந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர்,​​ கோல்டன் குளோப்,​​ பாஃப்டா உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்