skip to main |
skip to sidebar
இந்தியாவின் "குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.பனியன் உற்பத்தி என்பது நிட்டிங், சாயம், சலவை, கேலண்டரிங், கட்டிங், ஸ்டிச்சிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, அயர்னிங், பேக்கிங் என பலதரப்பட்ட நிலையை அடைந்துதான் முழுமை அடைகிறது.சாய, சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் முதற்கட்ட சுத்திகரிப்பு செய்த கழிவுநீர், ஒரத்துப்பாளையம் அணையைச் சென்றடைகிறது.சாய, சலவைக் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து, "அனைத்து சாய, சலவைத் தொழிற்சாலைகளும் மூன்று மாதக் காலத்துக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெற்று கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும்.ஒரத்துப்பாளையம் அணையைச் சுத்தம் செய்ய மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாகத் தமிழகப் பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்துள்ள ரூ.12.5 கோடியை திருப்பூர் சாய, சலவை உரிமையாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதன்படி, 1998 முதல் 420 சாய, சலவை ஆலைகள் தனித்தனியாகவும், 281 சாய, சலவை ஆலைகள் 8 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் சுமார் ரூ.30 கோடி செலவில் முதற்கட்ட சுத்திகரிப்பு முறையைச் செயல்படுத்தி வருகின்றன.இந்த முதற்கட்ட சுத்திகரிப்பு முறையில் நிறம், வாடை நீக்கப்படுகிறது. பிஓடி (பயாலாஜிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட்), சிஓடி (கெமிகல் ஆக்ஸிஜன் டிமாண்ட்) அளவுகள் சரி செய்யப்படுகின்றன. இதற்காக, சாய, சலவை ஆலை உரிமையாளர்கள் மாதந்தோறும் ரூ.3 கோடி செலவிடுகின்றனர்.இந்த நிலையில், கழிவுநீரால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் 2003}ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அனைத்து சாய, சலவை ஆலைகளும் சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரைச் சுத்தம் செய்து பூஜ்ய நிலைய கழிவுநீர் வெளியேற்றம் (ஜீரோ டிஸ்சார்ஜ்) என்ற நிலையை நடைமுறைப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டது.இதன்படி 524 சாய, சலவை ஆலைகள் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக 12 பொது சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்தன. இதற்காக, வங்கிகளில் ரூ.590.10 கோடி கடன், சாயப்பட்டறைகளின் பங்கு ரூ.210.32 கோடி என மொத்தம் ரூ.800.42 கோடி செலவிடப்பட்டது.பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் சாய, சலவை ஆலைகள் இதுவரை ரூ.100 கோடியை வட்டியாகச் செலுத்தியிருக்கின்றன.மீதமுள்ள 152 சாய, சலவை ஆலைகள் தனித்தனியாகச் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ரூ.200 கோடி செலவு செய்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடியாத 45 ஆலைகள் மூடப்பட்டன.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, முதற்கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு வெளியேறும் கழிவுநீரைக் குறைப்பதற்காக வாரம் இரு நாள்கள் (சனி, ஞாயிறு) சாய, சலவை ஆலைகளை இயக்குவதில்லை.உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் மோகன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின்படி பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தாமதம் செய்யும் ஆலைகள், அவற்றை அமைக்கும் காலம் வரை வெளியேற்றுகின்ற கழிவுநீருக்குக் கடந்த 2007 முதல் அபராதம் கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுதவிர, ஒரத்துப்பாளையம் அணையைச் சுத்தம் செய்வதற்காக ஆலை உரிமையாளர்கள் கொடுக்க வேண்டிய தொகை மற்றும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அத் தொகை பெறப்பட்டது.வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியோடு அசல் தவணைத் தொகையை மாதந்தோறும் கட்ட வேண்டிய சூழ்நிலையில் அபராதத் தொகையைத் தொடர்ந்து செலுத்த இயலாததால் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆனால், விவசாய நிவாரணம், நொய்யல் மாசுக்கான அபராதம் என ரூ.62.2 கோடியை 2009 டிசம்பர் 31}ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், 2010 ஜனவரி 5}ம் தேதிக்குள் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஆர்.ஓ.பிளான்ட் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால், ஆலை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். கடந்த 2007 அக்டோபர் முதல் ஏற்பட்ட அன்னியச் செலாவணி மாற்று விகிதம் அமெரிக்க டாலருக்குப் பாதமாக அமைந்ததாலும், உலகப் பொருளாதாரப் பின்னடைவால் ஏற்பட்ட மந்த நிலை, மின்தட்டுப்பாடு ஆகியவற்றால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இக் குறைகளைப் போக்க, சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் உடனடியாக இசைவாணை வழங்க வேண்டும். சுத்திகரிப்புப் பணிகளைச் செய்ய அதிக அளவில் மின்சாரம் தேவை என்பதால் இலவச மின்சாரம் வழங்க வழிவகை செய்யலாம்.சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசின் 60 சதமும், மாநில அரசின் 15 சதமும் மானியம் தாமதமின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையை தள்ளுபடி செய்ய ஆவன செய்யலாம்.சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வரும் சாய, சலவைத் தொழில் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும் என 2007}ல் அரசு உத்தரவு அளித்த பிறகுதான் சாய, சலவை ஆலை உரிமையாளர்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.ஆனால், இப்போது, வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அரசின் பாராமுகத்தையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் ஆலை உரிமையாளர்கள்.தமிழகத்தில் பல்வேறு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசு, ஆண்டுதோறும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு அன்னிய செலவாணியை ஈட்டித் தரும் பனியன் உற்பத்தித் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், தொழில் வளம் பெருகும் வாய்ப்பு உள்ளது.
Thanks Dinamani