-
Thursday, August 5, 2010
சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள்
சென்னை: சூரிய சுனாமியால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பூமிக்கு மேலே உள்ள காந்த வளையம், வெப்பக் கதிர்களை உள்ளே விடாமல் தடுத்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் சூரிய சுனாமி குறித்து மக்களிடையே பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பூமிக்கு என்னாகுமோ என்ற லேசான அச்சமும் படர்ந்துள்ளது. ஆனால் பயப்படத் தேவையில்லை என்று பல்வேறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்டார். இதை அப்போதைய குடியரசுத் தலைவர் [^] அப்துல் கலாம் வெகுவாகப் பாராட்டினார்.
அந்த நூலில், 2006க்கும் 2010ம் ஆண்டுக்கும் இடையே சூரியனிலிருந்து வெப்பக் கதிர்கள் பெருமளவில் பூமியை நோக்கி வரும் என்று கணித்துக் கூறியிருந்தார். தற்போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று தொடங்கியுள்ளது. இவரை பிரெஞ்சு ஞானி நாஸ்டர்டாமுடன் ஒப்பிட்டுப் பல நூல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பல்தேவ் கூறுகையில், நான் அன்று கூறியதைப் போன்ற நிகழ்வுதான் தற்போது நடந்து வருகிறது. தற்போது நடந்து கொண்டிருப்பதற்கு பெயர் coronal mass [^] ejection என்பதாகும். இது நேரடியாக பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை சோலார் சுனாமி என்றும் அழைக்கலாம். விண்வெளியில் பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இது நடந்து கொண்டிருக்கிறது.
சூரியனின் ஒரு புள்ளியில், பூமியைப் போல அல்லது பூமியை விட சற்று பெரிதான அளவில் ஏற்பட்டுள்ள வெடிப்பே இதற்குக் காரணம். இது நிச்சயம் மிக ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. வழக்கமாக வெளியாகும் வெப்பக் கதிர்களை விட தற்போது மிகப் பெரிய அளவில் வெப்பக் கதிர்கள் வெளியாக இந்த வெடிப்பே காரணம்.
இந்த வெப்பக் கதிர்கள் பூமிக்கு அருகில் வர முடியும். அதேசமயம், பூமியின் காந்தப் புலம் அதற்கு மேல் அது முன்னேற விடாமல் தடுத்து விடும். அதாவது பூமியின் காந்த வளையத்தை அது அடையும்போது வெப்பக் கதிர் வீச்சு புவி காந்தப் புயலாக (geomagnetic storm) மாறும்.
இந்த சூரிய சுனாமியால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஆபத்து இல்லை என்று கூறவும் முடியாது. அதேசமயம் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஒருவேளை தடுப்புகளைத் தாண்டி பூமியை அது நேரடியாக தாக்கக் கூடுமானால் பாதிப்புகள் பெருமளவில் இருக்கலாம்.
இந்த சூரிய சுனாமியால் செயற்கைக்கோள்கள் முற்றாக அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் சீர்குலையும். எனவே சூரிய சுனாமி தாக்குதலின்போது இவற்றை சற்று செயலிழக்க வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
இந்த சூரிய சுனாமியால் பீதி அடையத் தேவையில்லை. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றார் பல்தேவ்.
சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் [^] அய்யம்பெருமாள்
சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் இதுகுறித்துக் கூறுகையில்,
சூரியன் அதிக வெப்பத்தை எப்போதும் கக்கிக்கொண்டே இருக்கிறது. அது வெகு தூரத்தில் இருப்பதால் பூமிக்கு அந்த பாதிப்பு இல்லை. சூரியனின் மத்தியில் ஒரு கோடியே 50 லட்சம் டிகிரி சென்டிகிரேடு வெப்பம் உள்ளது. அதன் வெளிவிளிம்பு பகுதியில் 5 ஆயிரம் சென்டி கிரேடு வெப்பம் உள்ளது. சூரியனில் கரும்புள்ளி உள்ள இடங்களில் வெப்பம் குறைவு என்று அர்த்தம். தற்போது கரும்புள்ளிகள் குறைந்துள்ளன.
சூரியனில் புயல் ஏற்படும். அதாவது வெப்பக்காற்று வீசும். அது பூமியை நோக்கி வரும். கடந்த 2005-ம் ஆண்டு சூரிய புயல் ஏற்பட்டது. அதை விட இப்போது அதிக வெப்பத்தை அது வெளியில் விடுகிறது. இந்த சூரிய புயலின் வெப்பம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
பூமிக்கு மேல் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும். எனவே பூமிக்கும் மக்களுக்கும் இந்த சூரிய புயலால் எந்த வித ஆபத்தும் வராது என்றார்.