-
Sunday, September 12, 2010
இலவசத்தால் மக்களை வசப்படுத்தலாமா..?
தமிழகத்தின் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மனதை மயக்கும் இலவசத் திட்டங்கள் பெருகிவிட்டன. பட்டனைத் தட்டிவிட்டால் தட்டில் இட்லி என கலைவாணர் பாடியதுபோல இன்று உழைக்காமலேயே கையில் உணவு கிடைக்க ஆரம்பித்து விட்டது.
காரணம் இன்று தமிழகத்தில் வழங்கப்படும் பல்வேறு இலவச நலத்திட்டங்கள்தான்.
இதை தவறென்று யாரும் கூறவில்லை. மக்களை அரசு சுபிட்சமாக வாழவைக்கிறது
என்பது பெருமைப்படவேண்டிய விஷயம்தான். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? நீருயர வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும் என்ற மொழி இன்று மாறிவிட்டது.
இன்றைக்கு இலவச மின்சாரம், டிவி, எரிவாயு அடுப்பு, வீடு என இலவசங்களாக குவிகிறது. மேலும், சலுகை விலையில் அரிசி, முதியோர் உதவித் தொகை, பேருந்தில் இலவச பயணம், கர்ப்பிணிகளுக்கு உதவி, இலவச கல்வி, சத்துணவு, காப்பீட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் என பட்டியல் நீளுகிறது. இத்தனையும் அரசின் நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
உண்மையிலேயே இத்தனை வசதிகளும் கிடைக்கும்போது அதை வாழ்த்தாமல் வசைபாடுவது ஏன் என்பது ஆட்சியாளர்களின் கேள்வி. அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், எதற்கும் கவலையில்லை. ஏன் உழைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுகிறது.
உழைப்பது எதற்காக என்பதை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. உழைத்தால்தான் உடலும்,உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
வேளாவேளைக்கு உண்டுவிட்டு, மூலையில் முடங்கிகிடப்பதால் மனிதனின் ரத்தஓட்டம் பாதிக்கப்படுகிறது. நடைபயிற்சி மறந்துபோய் தளர்ந்துவிடுகிறான். வெயில், மழை என மாறி மாறி உடல் உழைப்பு மேற்கொள்வதால் நோய் நொடிக்கு வாய்ப்பில்லை. வயலிலும், ஆலைகளிலும் உழைப்பவர்கள் ஒய்யாரமாகப் படுத்தால் விளைவு என்னவாகும்.
விரைவிலேயே நடைதளர்ந்து, மனம் புழுங்கி, வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலை வந்துவிடுகிறது. ஆயுள்காலமும் குறுகிவிடுகிறது.
அன்று காடு, கரை என்ற சென்றவர்கள் இன்று கிராமப்புறங்களின் டீக்கடை பெஞ்சுகளிலும், ஆலமரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் பொழுதைக் கழிக்கின்றனர். எங்கிருந்தோ அரிசி கிடைக்கிறது! நமக்கென்ன என்ற அலட்சியம். போதாக்குறைக்கு நூறுநாள் வேலை என்ற பெயரில் அன்றன்று கையில் கிடைக்கும் ஊதியம். இது உழைக்காமல் கிடைக்கும் வருமானம்.
இப்படி கிடைக்கும் பணத்தை மதுக்கடைகளில் சென்று செலவழிப்பது வாடிக்கையாகிவிட்டது. விளைவு மதுக்கடை வருமானம் பல மடங்கு அதிகரிக்கிறது.
இதனால் கிடைக்கும் அபரிமிதமான வருவாயால் மேலும் பல இலவசத் திட்டங்களை அரசு வழங்கிவருகிறது. இப்படி உழைப்பவர்களை சோம்பேறிகளாக்குவதன் மூலம் சம்பாதிக்கத் தேவையில்லை என்ற மனோபாவம் ஏற்படுகிறது.
வாழ்க்கையின் அர்த்தமே மாறிவிடுகிறது. எதற்காக குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்? அவர்கள் காலத்துக்கும் இதே இலவசத் திட்டங்கள்தான் தொடருமே என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கியுள்ளது. கிராமப்புறங்களில் இன்று விவசாயம் செய்வதை பார்க்க முடியுமா என்ற பதைபதைப்பு எழுகிறது.
வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அரிசி பெரும் அளவில் இறக்குமதியாகிறதே இனி நாம் ஏன் சாகுபடி செய்ய வேண்டும் என்ற அளவுக்கு விவசாயிகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை இப்படியே வளரவிட்டால் நெல் என்ற தானியம், காய்கறிகள் போன்றவற்றை வெறும் புகைப்படங்களில் மட்டும்தான் பார்க்க வேண்டிவரும் என வேளாண்மை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ரெடிமேட் மிக்ஸ் போன்றே இனி அரிசிக்குப் பதில் உணவும் வந்துவிடும் என்ற நிலை வந்துவிட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளையாட வருங்காலச் சந்ததியினருக்கு போதிய உடல் வலு கிடைக்குமா என்பது தெரியவில்லை. விஞ்ஞானம்தான் வளர்ந்துவிட்டதே, இனி நாம் எதற்கு உழைக்க வேண்டும் என்ற கேள்வி இளையதலைமுறையினர் மத்தியில் நிலவுகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை மனதில் நிறுத்தி இலவசத்தால் மக்களை வசப்படுத்தவதை நிறுத்த வேண்டும். இதற்குப் பதிலாக கிஸôன் விகாஸ், இந்திரவிகாஸ் போன்ற பத்திரங்களைத் தரலாம்.
மேலும், காப்பீட்டுத் தொகையும் வழங்கலாம். அப்படித் தந்தால் அது வாழ்நாள் முழுக்க மக்களுக்குப் பயனளிக்கும் திட்டமாகத் திகழும். அதை விடுத்து இலவசங்கள் தொடர்ந்தால் மக்களின் மனதை மழுங்கடிக்கச் செய்யும். யானைகட்டிப் போரடித்த காலம் மறந்துபோனதைப்போல விளைநிலங்கள் காட்சிப்பொருளாக மாறும் என்பதே உண்மை.