Monday, September 13, 2010

இந்தச் "சாயம்' வெளுத்துப்போனால்...? வெளுக்கத் தொடங்குகிறது.


அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு' என்பது முயற்சி குறித்த அன்றையத் தமிழனின் அனுபவ மொழி. இன்றோ அது தலைகீழ். அதனால்தானோ என்னவோ, உழுது கொண்டிருக்கும் விவசாயிகள் அழுது கொண்டிருக்க வேண்டியதாகியுள்ளது.

ஊருக்குச் சோறிடுவதுடன் பிறரிடம் கைகட்டிப் பணியாற்ற வேண்டிய அவசியமின்றி காலந்தள்ள விவசாயமே சிறந்த தொழில் என்றிருந்த நிலைமை இன்று இல்லை. சில நேரங்களில் உழைத்த விவசாயிக்கே ஒரு வாய் சோறு கிடைக்காத நிலை. நாட்டின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த, நிகழும் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களே இதற்குச் சாட்சி!

பருவநிலை மாற்றத்தால் மழையின்மை, அல்லும்பகலும் நடக்கும் மணல் கொள்ளையால் ஒட்டகங்கள் உலா போகும்படி மாறிவிட்ட ஆறுகள், தூர்வாரப்படாத குளம், பராமரிக்கப்படாத கால்வாய், ஓசைப்படாமல் உயர்ந்துவிட்ட உர விலை, கண்கட்டு வித்தைபோல அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு எனப் பல்வேறு காரணங்களால், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்தும் பயனில்லாததால், முப்போகம் விளைந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இனி எப்போதும் விளையாத துயர நிலை.

விவசாயம் வீழ்ச்சி அடைவதற்கு விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்படுவதும் ஒரு காரணம். செங்கல் சூளைகள், காற்றாலை நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவை அமைக்கப்படுவதாலும் கணிசமான பரப்பிலான விளைநிலங்கள் அழிந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, சில பகுதிகளில் சாயப்பட்டறைகள், காகித ஆலைகள் போன்றவற்றிலிருந்து திறந்துவிடப்படும் கழிவுநீரால் விவசாய நிலங்கள் நாளடைவில் பயனற்றுப் போகின்றன. ஒன்றுக்குப் பத்தாய் பலன் தந்த நிலங்கள் ஒன்றுக்குமற்றதாய் மாறிவிடுகின்றன.

விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்வதில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முக்கியப் பங்குண்டு. இதனால் விவசாயிகள், விவசாயக் கூலிகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

சமுதாயத்துக்குச் சிறிதும் பயனில்லாத பொழுதுபோக்கு அம்சமான திரைப்படங்களைத் தயாரிப்போர் தாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு கோடிக்கணக்கில் விலை நிர்ணயிக்க முடிகிறது. அவற்றை வாங்கித் திரையிடும் திரையரங்குகளின் உரிமையாளர்களும் இஷ்டம்போல கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஆனால், உயிர்வாழ அடிப்படையான விவசாயப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிக்கு நியாயமான விலையைக்கூட அவர்களே நிர்ணயிக்க முடியாத நிலை. இதில் ஒரு கொடுமை, அந்த விளைபொருள்களை வாங்கி விற்போர் பல மடங்கு லாபம் பார்த்து வசதி படைத்தோராக மாறிவிடுகின்றனர்.

அவற்றை விளைவிக்கும் விவசாயிகளோ பெருமூச்சு வாங்கி, ஏங்கி நிற்போராகவே வாழ்க்கையை சிரமத்துடன் நகர்த்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

நிலத்தடி நீரை இடைவிடாமல் உறிஞ்சி உற்பத்தி செய்யப்படும் குளிர்பானங்களை 200 மி.லி. ரூ.20 கொடுத்துக்கூட அடிக்கடி வாங்கிப்பருகும் மக்கள், காய்கறிகள் கிலோ ரூ.20-ஐ தாண்டினாலே கொள்ளை விலை எனக் கூப்பாடு போடுவதுண்டு.

ஆனால், அந்த 20 ரூபாயிலும் நாலில் ஒரு பங்கு தொகைகூட விளைவிக்கும் விவசாயிக்குக் கிடைப்பதில்லை என்பதே சோகம் கலந்த உண்மை!

விவசாயம் வீழ்வதற்கு மற்றொரு முக்கியக் காரணம், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பது.

மருத்துவரின் மகன் மருத்துவராகலாம். பொறியாளரின் மகன் பொறியாளராகலாம். அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதியாகலாம்.

அந்த வரிசையில், விவசாயியின் மகன் விவசாயி ஆவதைத்தான் மற்றவர்கள் விரும்புகின்றனர். ஆனால், அதை விவசாயி விரும்புவதில்லை.

விவசாயம் என்னாகுமோ, எதிர்காலச் சந்ததி சோற்றுக்கே திண்டாடும் நிலை வருமோ என்றெல்லாம் மிகுந்த கவலைப்படுவதாகக் கூறுவோர், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடக் கூடாது என்று அறிவுறுத்தி மேடைதோறும் முழங்குவோர் யாரும் தனது மகனோ, மகளோ விவசாயி ஆவதை விரும்புவதில்லை.

அவர்கள் சந்ததி மட்டும் மெட்ரிக் பள்ளியில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசி வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போய் கணினியும் கையுமாய் இருக்க விரும்புகையில், தங்கள் சந்ததி மட்டும் கண்ணீரும் கையில் பிடித்த கலப்பையுமாய் இருக்க விரும்புவது எந்தவகை நியாயம் என விவசாயிகள் கேட்பதில் தவறில்லையோ எனத் தோன்றுகிறது.

கடந்த காலங்களில் காலநேரமின்றி அயர்வை நினையாமல் வியர்வை சிந்திப் பாடுபட்டும், கடன் மட்டுமே தான் கண்ட பலன் என்பதால், மற்றவர்களைப்போல தனது வருங்காலத் தலைமுறையும் ஏசி அறையில், எட்டு மணி நேர உழைப்பில் வியர்க்காமல் முன்னேற வேண்டும் என்றே விவசாயிகள் மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

சற்று வசதிபடைத்த அல்லது அதிக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளாக இருந்தால், தனது நிலத்தின் ஒருபகுதியை விற்று மீதி நிலத்தில் கோழிப்பண்ணையோ, செங்கல்சூளையோ தொடங்கி தங்கள் பரம்பரையின் விவசாயத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.

அந்தக் காலத்தில் செயற்கை உரங்களில்லை, இலவச மின்சாரமுமில்லை, பம்ப் செட்டும் இல்லை. கடன் தள்ளுபடியுமில்லை.

ஆனால், விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் இருந்தது. இன்றைக்கோ எல்லாம் இருக்கிறது, ஏற்றம் தான் இல்லை.

ஒருபுறம் குறைந்துவரும் விவசாய நிலங்களின் பரப்பளவு, மறுபுறம் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் விவசாயிகள். விளைவு...வெளுக்கத் தொடங்குகிறது விவ"சாயம்'. விழித்துக் கொள்ள வேண்டிய வேளை இது!