Tuesday, September 14, 2010

உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம், நீதிமன்றம், அரசுப் பணித்துறை ஆகிய மூன்றின் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த வல்லுநர் குழு அதிகபட்சம் நம்மை அரசாட்சி செய்த பிரிட்டிஷ் அரசியலமைப்பை அதிகமாகப் பின்பற்றி, இம்மூன்றில் நாடாளுமன்ற அதிகாரமே மேலோங்கும்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால், இந்தியாவில் பிரதம மந்திரியே சர்வ வல்லமை படைத்தவர்.


அதேசமயம், ஆளும் கட்சித் தலைவராயுள்ள சோனியா காந்தியிடம் பாசக்கயிறு உள்ளதால், நமது பிரதமர் உண்மையில் ஒரு ஆட்டுவிக்கும் பொம்மையாகிவிட்டார். கட்சித் தலைமையும் பிரதமர் பதவியும் ஒரே நபரிடம் இருந்தால் பிரதமரின் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தைவிட உச்சமாயிருக்க்கும். ஆட்டுவித்தால் ஆடிப்போகும் அதிகாரத்தை உடைய பிரதமர், உச்ச நீதிமன்றத்தைக் கேள்வி கேட்டுள்ளார்.
÷""உன் அதிகார வரம்பை மீறாதே, நாங்கள் வகுத்துள்ள உணவுக்கொள்கையில் கொள்முதல் செய்த உணவை மனிதனுக்குப் போடுவோம். மாட்டுக்குப் போடுவோம், அதையெல்லாம் கேட்காதே. நாடாளுமன்றம் வகுத்துள்ள கொள்கையில் மூக்கை நுழைக்காதே. நீ சொன்னால் நாங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கமுடியாது'' என்ற பொருளில் கூறியுள்ளார்.


÷அதற்கு முதல் நாள் நிதியமைச்சர் பரவாயில்லை, "தேங்கியுள்ள உணவு இருப்பை உச்ச நீதிமன்ற ஆணையை ஒட்டி பொது விநியோகத்துக்கு அனுப்புவதாக' வாக்களித்தார்.
÷நாளுக்கு நாள் உணவு விலை உயர்ந்து வருகிறது. வெளி அங்காடியில் 1 கிலோ அரிசி ரூ. 40. பருப்புகள் எல்லாம் ரூ. 80 முதல் ரூ. 100 வரை. விலைவாசி உயர்வால் நடுத்தரவர்க்கம் திண்டாடிவரும் சூழ்நிலையில், உணவு விநியோகத்தில் தேவைக்குமேல் இருப்பு வைக்கும் போக்கு வளர்ந்துவிட்டது. பொது விநியோகத்துக்கு இவ்வளவுதான் கொள்முதல் செய்ய வேண்டும்; இவ்வளவுதான் இருப்பு வைக்க வேண்டும் என்ற திறன்மிகு உணவு நிர்வாகம் இல்லாததால், இந்த விலை உயர்வால் விவசாயிக்கும் லாபமில்லை; உண்பவனுக்கும் லாபமில்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.


÷2010 - ஜூலை மாதம் மொத்த அரிசி - கோதுமை இருப்பு 5.8 கோடி டன்களாகும். உண்மையில் இவ்வளவு இருப்பு வைத்துக்கொண்டு உணவை வீணாக்குவது சரியல்ல. உணவு மூட்டைகளை அடுக்கிப் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாமல் திறந்த வெளியில் அடுக்கி, கரிய தார்ப்பாலின் போட்டு மூடிவைப்பது நன்றா? மழை, வெப்பம் மிகுதி காரணத்தால் ஈரக்காற்று வெளியேறாமல் அமுக்கம் காரணமாக உணவுதானியம் கெட்டுவிடும். நியாயமாகப் பார்த்தால் 2.5 கோடி டன்னுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது உணவு இருப்பு ஒரு மடங்கு அதிகமே. அதாவது 30 மில்லியன் அல்லது 3 கோடி டன்கள் "ஓவர் ப்ரக்யூர்மெண்ட்' ஆகியுள்ளது.


÷இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓர் அரசாங்கமே தேவைக்குமேல் "அரசுக்கொள்முதல்', "பொது விநியோகம்' என்ற போர்வையில் உணவைப் பதுக்கிவைத்து, அதைக் காப்பாற்றவும் தெரியாமல் கெட்டுப்போய் நிஜப் பெருச்சாளிகளும், கெட்டுப்போனதாக முலாம் பூசி மனிதப் பெருச்சாளிகளும் உண்பது நியாயந்தானா? இப்படி வீணாக்குவதற்கு பதிலாக ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிவிடலாமே என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள பின்னணியையும் உண்மையையும் ஒரு பொறுப்புள்ள அரசு உணர்ந்து செயல்பட வேண்டுமே தவிர, உச்ச நீதிமன்ற ஆணையைக் கொச்சைப்படுத்திப் பேசக்கூடாது. "சத்யமேவ ஜயதே' என்ற தாரக மந்திரத்தை மறக்கலாமா?


÷பொது விநியோகத் தேவைக்கு மேல் இந்த ஆண்டு உணவுக் கொள்முதல் செய்ததன் மர்மம் என்ன? கூடவே ஏராளமான சந்தேகத்தையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. உணவு மற்றும் விவசாய அமைச்சரகத்தில் பல்லாண்டு பணி செய்து ஓய்வு பெற்றவன் என்ற முறையில் கொள்முதல், இருப்பு பற்றி முன்பே பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.


÷மையத்தில் ஒரு உணவுக் கார்ப்பரேஷன் உள்ளது. மாநில அளவிலும் பல மாநிலங்களில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன்கள் உள்ளன. இந்தக் கார்ப்பரேஷன்களின் ஆண்டுக் கணக்கு தணிக்கை அறிக்கை, வரவு - செலவு அறிக்கை, பாலன்ஸ் ஷீட் முதலியவற்றைப் பெற்று நுட்பமாக ஆராய்ந்தால் எவ்வளவோ உண்மைகள் வெட்ட வெளிச்சமாகும். உணவை ஏற்றுமதி செய்யும் லட்சணமும் புரியும்.


÷உணவை இறக்குமதி செய்யும்போது உலக அங்காடியில் கோதுமை, அரிசி விலை உயர்ந்து இருக்கும். உணவை ஏற்றுமதி செய்யும்போது உலக அங்காடி விலை மிகவும் குறைவாயிருக்கும். தனியார் ஏற்றுமதி செய்யும் பாசுமதி அரிசி, மசூரி, வெள்ளைப்பொன்னி போன்ற சன்னரகங்கள் முறையாக வணிகரீதியில் ஏற்றுமதியாகும். ஆனால், அரிசி ஏஜன்டுகளின் ஏற்றுமதியில் தரம் சரியாக இருக்காது. திருப்பி அனுப்பப்பட்டு கால்நடைகளுக்குரிய அடர் தீவன உணவாகப் பயனாகும். இறக்குமதியாகும் கோதுமை, அரிசி கப்பலிலிருந்து இறக்கியவுடன் திறந்த வெளியில் கேட்பாரற்று பல நாள்கள், வாரங்கள், மாதங்கள் இருப்பதை எவ்வளவோ பத்திரிகைகள் படம்பிடித்து வெளியிட்டபோது ஏற்படாத சொரணை, இப்போது உச்ச நீதிமன்றம் தட்டிக்கேட்டபோது ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கெட்டுப்போன கோதுமை, அரிசியைக் கார்ப்பரேஷன் விடுவிப்பிலிருந்தோ ஏலத்தின் மூலமோ பெற்று சுத்தம் செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவை திரும்பி வந்து இந்தியாவில் உள்ள கலப்பின சீமைப் பசுக்களுக்கு அடர் தீவனமாகவோ, குச்சித்தீவனமாகவோ வழங்கிய கதைகளும் உண்டு.


÷உண்மையில், மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசாட்சி செய்யும் பொறுப்புள்ள அமைச்சர்கள், இந்த நாட்டுக்கு இவ்வளவு மோசமாக உணவுக்கொள்கையை வகுத்து, உணவிருந்தும் ஒரு பக்கம் ஏழைகளைப் பட்டினியால் வாடவிட்டும், மறுபக்கம் லட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளவும் காரணமான அரசாங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு சவுக்கடிக்குப் பின் உண்மை நிலையை உணர்ந்து அரசு உருப்படியான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.


தேவைக்குமேல் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது வெளி அங்காடி விலை உயர்கிறது. தனிப்பட்ட வியாபாரி அளவுக்கு மீறி உணவுப் பொருள்களை இருப்பு வைத்திருந்தால் "பதுக்கல்' என்று கூறி அதைக் கையகப்படுத்தச் சட்டம் உள்ளது. அதே தவறை அரசு செய்வது சரியாகுமா? தேவைக்கு மேல் இருப்பு அரசு வைத்தாலும் வெளி அங்காடியில் அரிசி, கோதுமை விலை ஏறாதா?
நமது கனிமவளங்கள் சூழ்ந்துள்ள கர்நாடகம், ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ம.பி. போன்ற மாநிலங்களில் எங்கெல்லாம் மாவோயிஸ்ட் வன்முறை நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கனிமவளச் சுரண்டல் கொடிகட்டிப் பறக்கிறது. இது குறித்து ஊடகங்களில் அடிபடும் பெயர்கள் சிறு உதாரணங்களே! வரும் ஆண்டுகளில் கனிமவளம் சூழ்ந்துள்ள இடங்களின் அகழ்வுகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சமமாக உள்ளூர் தொழில் நிறுவனங்கள் - டாட்டா பூட்டாக்களும், பிர்லா குர்லாக்களும் வேதத்தைப் பொய்யாக்கும் வேதாந்தா போன்ற அயல்நாட்டு இந்திய நிறுவனங்களும் கைகோத்துக்கொண்டு ஒன்றுக்குப் பிறகு கோடிக்கணக்கான பூஜ்ஜிய டாலர்கள் முதல் போட்டு நிகழ்த்தவிருக்கும் சுரங்கத் தொழில்களால் இதுவரை 2 கோடி வனவாசிகள் வாழ்விழந்துள்ளனர். நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன, பல லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாழாகி வருகிறது.
÷வனவாசிகள் - விவசாயிகள் மீது சுரங்க அதிபர்களின் கூலிப்படை குண்டர்களும் மாநில அரசின் போலீஸ் படைகளும் போர் தொடுப்பதால் வறுமையும் வன்முறையும் தலைதூக்கியுள்ள இத்தகைய இடங்களில் வீணாகி வரும் உணவை இலவசமாக வழங்கக் கூடாதா? ஒருக்கால் உச்ச நீதிமன்றம் இத்தகைய மக்களை மனதில் வைத்துக் கேள்வி எழுப்பியிருக்கலாம். இப்படிப்பட்ட கனிமவளச் சுரண்டலினால், விவசாயம், சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றிய கவலை மக்களின் பிரதிநிதிகளாயுள்ள அமைச்சர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.


ஒரு மரத்தை வெட்டினால் பல மரங்களை நடவேண்டும் என்ற உணர்வுபோல், 1 ஏக்கர் நிலம் மாசுபட்டால் 1 ஏக்கர் நிலத்தைப் பசுமையாக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து மில்லியன் பில்லியனில் இயற்கை வளத்தைச் சுரண்டுவோர், அதில் பாதிப்பங்கை உணவு உற்பத்திக்குரிய விவசாயத்தில் ஈடுபடும் பழங்குடி விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும். பாரம்பரியமாக விவசாயம் செய்யும் மக்களுக்கு மீண்டும் அவர்களை விவசாயத்துக்குத் தூண்டும் வழியில் உணவு உற்பத்தி நிகழ வேண்டும். அதற்காகவும் பணம் சில மில்லியன்கள் செலவழித்தால் என்ன?


÷ஒரு பக்கம் உணவுக்குவியல். மறுபக்கம் உணவின் விலையேற்றம். நடுவே இயற்கை வளச்சுரண்டல். உபரி உணவு குறைகிறது. குறைந்த உபரியை அரசே ஏகபோகமாகக் கொள்முதல் செய்துவிட்டு, அதுவும் குறைந்தவிலை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிப் பிடுங்குவது போன்ற ஆதரவே இல்லாத ஆதரவு விலையை வழங்கிவிட்டு, அங்காடியில் விலை ஏறியதும் அந்த விலையேற்றத்தின் மூலம் விவசாயிகள் லாபம் பெறும் வழியையும் அடைத்துவிட்டது.


÷பதுக்கலைத் தடுக்கவேண்டிய அரசாங்கம், "உணவுக்கொள்கை', "உணவுப் பாதுகாப்பு' என்கிற பெயர்களில் பதுக்குவது ஒரு குற்றம். அப்படிப் பதுக்கியதை வீணாக்குவது அதைவிடப் பெரிய குற்றம். இக்குற்றங்களைப் புரிந்துகொள்ள அரசை, உச்ச நீதிமன்றம் தட்டிக்கேட்டுள்ளதே தவிர, தண்டனையையா வழங்கியது? ""இப்படி வீணாகும் உணவை இலவசமாக ஏழைகளுக்கு வழங்கலாமே'' என்று நியாயம் வழங்கியுள்ள நீதிமன்றத்தை அவமதிப்பது அழகல்ல. உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும். நீதிமன்றமும் நாடாளுமன்றமும் ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்!