skip to main |
skip to sidebar
உலகில் உண்மையான வேளாண்மை இந்தியா, ஆப்பிரிக்கா, இதர ஆசிய நாடுகளில் மட்டுமே நிகழ்கிறது. வடக்கு நாடுகளில் உண்மையான வேளாண்மை அழிந்துவிட்டது. அங்கு நிகழ்வது தொழில்மய வேளாண்மை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு மரவளர்ப்புடன் எரிசக்தியை மிச்சப்படுத்தும் விவசாயத்தை இணைத்துப் "பர்மாகல்ச்சர்' (ல்ங்ழ்ம்ஹஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) என்ற ஒரு வேளாண் பண்பாட்டை உருவாக்கிய பில்மோலிசன் செய்த முன்னெச்சரிக்கை இன்று உண்மையாகிவிட்டது. அவர் செய்த முன்னெச்சரிக்கை இதுதான்.""இன்னும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவின் உதவித் திட்டங்களின் ஏமாற்று வேலைகள் வெட்ட வெளிச்சமாகும். இயற்கை விவசாயத்தின் மீது உண்மையான கவனம் திரும்பும். தொழில்மய விவசாயம் மெல்ல மெல்ல அழிந்துவிடும். பெருகிவரும் சாகுபடிச் செலவைச் சமாளிக்க முடியாது. தொழில்மய விவசாயத்தில் இடுபொருள் செலவு பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தித் தேவையின் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அதாவது என்.பி.கே. என்று சொல்லப்படும் ரசாயன உரங்கள், அழிந்துவரும் புதைவு எரிசக்திகளை வைத்து உற்பத்தியாவதால் பெட்ரோல் விலை உயர்ந்தால் உரவிலையும் உயர்ந்து பட்ஜெட்டின் பெரும்பகுதிச் செலவை உரமானியத்துக்கு மட்டுமே வழங்க வேண்டிவரும். இப்படிப்பட்ட உரம், விதைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் உள்ளன. எவ்வளவு விரைவில் வளரும் நாடுகளின் விவசாயம் பன்னாட்டு முதலாளிகளிலிருந்து மீட்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக வளரும் நாடுகள் நலம் பெறும். வாழ்வியலை மையமிட்ட வேளாண்மையே என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில் அது தற்சார்புள்ளது. அதில் பெட்ரோலிய எரிசக்தி வீணாவது இல்லை.......'' அவரின் இந்த முன்னெச்சரிக்கை வாசகங்கள் இன்று உண்மையாகிவிட்டது. காலநிலைத் தடுமாற்றத்தால் விவசாயம் தடுமாறுகிறது என்று கூறினாலும் சரி; தொழில்மய விவசாயத்தினால் காலநிலைத் தடுமாற்றம் ஏற்படுகிறது என்று கூறினாலும் சரி; காலநிலைத் தடுமாற்றம் அல்லது தட்பவெப்பத் தடுமாற்றம் பசுமையகக் கெட்ட வாயுக்களால் உருவாகிறது என்பதை அனைவரும் அறிவோம். தொழில் நகரங்கள், கார், லாரி போன்ற போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றால் 70 சதம் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன. தொழில்மய விவசாயத்தின் பங்கு 30 சதம் என்பது ஒரு குறைவான மதிப்பீடுதான். ஏனெனில் ரசாயன உர உற்பத்தி, ரசாயன உரங்களின் போக்குவரத்து எல்லாம் தொழில்துறையின் கெட்ட வாயு வெளியீட்டுக்கான காரணமாகக் கணக்கிடப்பட்டுள்ளன. யூரியா, என்.பி.கே. காம்ப்ளக்ஸ் போன்றவை மண்ணில் இடப்பட்டு வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு என்ற கெட்ட வாயு, நவீன கால்நடை - பால் பண்ணைகளிலிருந்து வெளியாகும் மீத்தேன் என்ற கெட்ட வாயு ஆகிய இரண்டும் ஓசோன் படலத்தைத் துளைப்பதில் கார்பன் டை ஆக்சைடைவிட வலிமை வாய்ந்ததாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இவ்வாறு தட்பவெப்பத் தடுமாற்றத்தை உருவாக்கும் தொழில்மய விவசாயத்தால் உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான விவசாயிகளும், தட்பவெப்பத் தடுமாற்றத்திற்குட்பட்ட நிலங்களில் வசிக்கும் 37 கோடி கிராமிய ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.தட்பவெப்பத் தடுமாற்றம் ஏற்படுத்தும் கனமழை, கூடுதல் வெப்பம், கூடுதலான குளிர், கூடுதல் வறட்சி, புயல், வெள்ளம் எல்லாம் நமது விவசாய பட்டப் பழமொழிகளை மாற்றிவிடும். ஆடிப்பட்டம் தேடி விதைத்தால் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பருவம் பொய்த்து சித்திரை வெய்யில் தாக்கும். சித்திரை மாதம் மழை பெய்யலாம். குளிர் அடிக்கலாம். ஆடிப்பட்டம் பொய்த்தால் தைப்பட்டம். உத்தராயணத்தில் வெய்யில் இல்லாமல் மழை பெய்து தைப்பட்டம் தம்பட்டமாகும். உலகில் 80 சத விவசாயம் மானாவாரிதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மானாவாரி விவசாயமே மூச்சடைத்துப் போகும் ஆபத்து உள்ளது. வளரும் நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு ரசாயன உரங்களின் தேவை உயர்ந்து வருகிறது. ரசாயன உரங்கள் பெட்ரோல், டீசல் போன்ற மீண்டும் புதுப்பிக்க முடியாத புதைவு எரிசக்தியைப் பயன்படுத்தி உற்பத்தியாவதால் எரிசக்தி நெருக்கடியைத் தோற்றுவிக்கும். அத்தோடு ரசாயன உரப்பயன்பாடு இயற்கை வழி விவசாயத்தைவிட மூன்று மடங்கு கெட்ட வாயுக்களை உருவாக்கித் தட்பவெப்பத் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. 2030-ஐ நாம் நெருங்கும்போது ரசாயன உர உற்பத்தியை 37 சதம் உயர்த்தும் திட்டம் உள்ளதால் கெட்ட வாயுக்களின் உற்பத்தியும் உயர்ந்து, எரிசக்திச் செலவும் உயர்ந்து நமது கண்களை நாமே குத்திக் கொண்டு குருடர்களாக வாழப் போகிறோம். கெட்ட வாயுக்களின் உற்பத்தியாளரான உர நிறுவனங்களும், விதை நிறுவன பகாசூரர்களும் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயக் கொள்கையை வகுத்து வருகிறார்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் உயிர்ச்சூழலுக்கு உலைவைக்கும் ஒரே ரகப் பயிர்ப்பண்பாடு - அதாவது மோனோகல்ச்சர். உலகிற்குப் பாதுகாப்பான விவசாயம் பர்மாகல்ச்சரிலும், பல்லுயிர்கல்ச்சர் என்று சொல்லப்படும் பயோடைவர்ஸ் விவசாயத்திலும் உள்ளதை அவர்கள் அறிவார்கள் என்றாலும் விதை நிறுவன - உர நிறுவன பகாசூரர்களுக்கு அவற்றால் சுயலாபம் சிறிதும் இல்லை.உலகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரப்புவதில் எல்லா நாடுகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டது ரோடேல் நிறுவனம். இந்நிறுவனம் தத்துவரீதியாக ஒரு மாற்றுத்திட்டத்தை முன்மொழிந்து எவ்வாறு எதிர்கால இடர்களை - தட்பவெப்பத் தடுமாற்றத்துக்குரிய சவாலைச் சந்திப்பது என்பதற்கான சில டிப்ஸ் வழங்கியுள்ளது.இந்த அரிய யோசனைகளை கடைப்பிடித்தால் நாமும் நமது சந்ததிகளும் பிழைக்கவும் நாடு செழிக்கவும் வாய்ப்புகள் உண்டு.கரியமில வாயுவைப் பிடித்து வைத்துப் பிராணவாயுவாக மாற்றும் உயிர் மண்ணை - அதாவது பல்லுயிரிகளைக் கொண்ட மண்ணை உருவாக்க வேண்டும். மண்ணானது நைட்ரஜனைப் பிடித்து வைத்துக் கொண்டு அதேசமயம் நைட்ரிக் ஆக்சைடாக வெளியேற்றாமல் இருக்க பயறுவகைப் பயிர்களான உளுந்து, தட்டைப் பயறு, பாசிப்பயறு, துவரை, அகத்தி, வேர்க்கடலை, வெந்தயம், தக்காளி, அவரை, மொச்சை போன்றவற்றை பயிரிட வேண்டும். இவற்றை ஆங்கிலத்தில் லெகுமினஸ் பயிர்கள் என்பார்கள். இவ்வகைப் பயிர்களைக் கலப்பாகவோ, பயிர்ச்சுழற்சி முறையிலோ பயிரிடும் பாரம்பர்ய மரபை மீட்டுயிர்த்தால் யூரியா செலவைக் குறைக்கலாம். யூரியாவைப் பயன்படுத்தும்போது பயிர் ஏற்காதவை, நைட்ரேட்டாக மாறிக் குடிநீரை விஷமாக்கும் அல்லது நைட்ரிக் ஆவியாகமாறி பிராணனை வாங்கும். அதாவது ஓசோனைக் கிழிக்கும். மூன்றாவதாக பெரன்னியல் பயிர்களைச் சாகுபடி செய்வது. பெரன்னியல் என்றால் அதிக வயதுள்ள பயிர்கள். இதனால் கார்பன் மண்ணுக்குள் இருந்து வெளியேறாமல் இருக்கும்.நான்காவதாக, பசுமை அல்லது உயிர் மூடாக்கு. அதாவது ஒரு அறுவடைக்குப் பின் முன்கூட்டியே விதைத்துப் பசுமையாக்கி அடுத்த விதைப்பு வரை நிலத்தைத் தரிசாகப் போடாமல் இருத்தல். பொதுவாக நிலத்தைப் பசுமை மாறாமல் வைத்திருக்க வேண்டும். இதனால் மண்ணில் உள்ள நைட்ரஜனானது, நைட்ரஜன் ஆக்சைடு என்ற கெட்ட வாயுவாக வெளியேறாது. வளரும் நாடுகளின் எதிர்கால வேளாண்மையைப் பற்றி ஆராய்ந்துவரும் வேளாண் விஞ்ஞானி லைம் லை சிங் இன்றைய வேளாண்மை வெளிப்படுத்தும் பசுமையகக் கெட்ட வாயுக்களை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறன் இயற்கை வேளாண்மைக்கு மட்டுமே உண்டு என்கிறார். அவர் விடுத்துள்ள ஒரு செய்திமடலில், இன்றைய விவசாயம், ஓசோனைத் தின்னும் ஒட்டுமொத்த கெட்ட வாயுக்களில் பத்துமுதல் பன்னிரண்டு சதத்தை மேலே செலுத்துகிறதாம். அவற்றில் இ02 என்ற கரியமில வாயு இஏ4 என்ற மீத்தேன் வாயு ச2ர் என்ற நைட்ரிக் வாயு அடங்கும். கால்நடை வளர்ப்போர் சாணியைச் சேர்த்துக் குவித்து, திறந்த வெளியில் கொட்டுவதால் மீத்தேன் வாயுவும், ரசாயன உரங்களை மண்ணில் கொட்டுவதால் நைட்ரிக் வாயுவும் கெட்ட வாயுக்களாக மாறுகின்றன. பசுமைப் பொருள்களான பயோமாசை எரிப்பதாலும் கார்பன்டை ஆக்சைடு கெட்ட வாயுவாகிறது.தட்பவெப்பத் தடுமாற்ற விளைவைக் கருத்தில் கொள்ளாமல் நாம் செய்யும் விவசாயம் நமக்கே ஆபத்தைத் தேடித்தரும். தட்ப வெப்பத் தடுமாற்றத்துக்கு ஏற்ப விவசாயத்தைத் தடுமாறாமல் இட்டுச் செல்வது இயற்கை விவசாயமே. ஒரு நிலத்தில் ஒரேவகைப் பயிரைச் சாகுபடி செய்யாமல் பலரகப் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு வகையிலும் பலரகங்கள் உண்டு. கத்தரிக்காய் என்று எடுத்துக் கொண்டால் பி.டி. கத்தரிக்காயை மட்டுமே சாகுபடி செய்தால் குலநாசம் ஏற்படும். மாறாக 50 சென்டு நிலத்தில் கத்தரிக்காய் பயிர் செய்ய விரும்பினால், 10 சென்டு பச்சைக் கத்தரிக்காய், 10 சென்டு வெள்ளைக் கத்தரிக்காய், 10 சென்டு ஊதா கத்தரி 10 சென்டு எண்ணெய்க் கத்தரிக்காய், 10 சென்டு முள்ளுக் கத்தரிக்காய் என்று பிரித்து நடுவதே பயோடைவர்ஸ் விவசாயம். இடையிடையே குச்சிப் பந்தலிட்டு புடல், பீர்க்கை என்று நிறைய இடைவெளிவிட்டு சாகுபடி செய்யலாம். ஒரு பக்கம் திரும்பினால் சோளம், ஒரு பக்கம் திரும்பினால் நெல், ஒருபக்கம் திரும்பினால் வாழை, ஒரு பக்கம் தீவனப்புல், தட்டைப் பயறு என்று பல வகைகளிலும் பல ரகங்களைக் கலந்து பயிரிட வேண்டும். இவ்வாறு செய்யும்போது தட்பவெப்பத் தடுமாற்றத்தைத் தாங்கக்கூடிய வகைகளையும் ரகங்களையும் அறிவது எளிதாகும். ஒரு ரகத்தில் ஏற்படும் நஷ்டத்தை வேறு ரகம் தரும் லாபத்தைக் கொண்டு சமாளிக்கலாம்.உண்ணும் பயிர்களில் மட்டுமல்ல; கால்நடை வளர்ப்பிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தட்பவெப்பத் தடுமாற்றத்தால் நோய்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆடு மாடுகள், கடல் மட்டம் உயர்வு, தாழ்வு, வெப்பம் போன்ற கடல் சூழலுக்கு ஏற்ப வாழக்கூடிய மீன்வகை இனப்பெருக்கம் என்று மீன், கால்நடைகளிலும் பல்லுயிர்ப் பெருக்கம் விரும்பப்படுகிறது. தட்பவெப்பத் தடுமாற்றத்தால், வளரும் நாடுகளில் வாழும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் மீனவர்கள், ஆதிவாசிகள் அதிக அளவில் உணவு இல்லாமல் மடிவர் என்று ஐ.நா. மதிப்பீடு கூறுகிறது. தட்பவெப்பத் தடுமாற்றத்தால் அதிகம் தடுமாறக்கூடிய நிலப் பகுதிகளில் வாழும் சுமார் 40 கோடி மக்கள் பல்லுயிர்ப் பெருக்கரீதியான விவசாயம், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வாழ்வை வளப்படுத்த வாய்ப்புள்ளதாக பல்லுயிர்ப் பெருக்க - உயிர்ச்சுழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Thanks
Dinamani