Friday, February 12, 2010

பிரமிப்பூட்டும் இந்திய கலாசாரம்!

கோவை,​ பிப்.11: இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாசாரம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக ரோட்டரி சங்கத்தின் இளைஞர் பறிமாற்ற நிகழ்ச்சி மூலம் கோவைக்கு வந்துள்ள வெளிநாட்டவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

÷அமெரிக்கா, ​ தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோட்டரி சங்கங்கள் செயல்படுகின்றன. அந்தச் சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதற்காக கோவைக்கு வந்துள்ளனர். அவர்கள் கோவை நிருபர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி பங்கேற்றனர்.

÷இந் நிகழ்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச ரோட்டரி ஜிஎஸ்ஈ குழுவை சேர்ந்த சோனியா ஆசாத் பேசியது:

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது. இங்கு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான இணைப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மேலும்,​ இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சீதோஷ்ண நிலை நிலவுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

வர்த்தக ஆலோசகர் அட்டிப் முகமது:​ அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய இளைஞர்கள் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றனர். உலக அறிஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களது செயல்பாடு அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரம் விரைவாக சீரடைந்து வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் கலந்து கொண்டனர்.