Thursday, February 11, 2010

சர்க்கரை விலை உயர்வு மக்களைப் பெரிதாக பாதித்ததா இல்லையா?

சர்க்கரை சாப்பிடாததால் இறந்தவர் யாருமில்லை-​ விலை உயர்வு பற்றி நாடே கொதித்துக் கொண்டிருக்கையில்,​​ எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்ததுபோல இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கை முழக்க இதழ் "ராஷ்டிரவாதி'.

விலை உயர்வுக்கு சரத் பவார் மட்டுமே காரணமல்ல என்பதை விளக்குவதற்காக இப்பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சர்க்கரை சாப்பிடாததால் இறந்தவர் யாருமில்லை என்று சொல்லியிருப்பதும் "இதுக்குப் போயி அலட்டிக்கலாமா!' என்கிற தொனியில் அந்தக் கட்டுரை அமைந்திருப்பதும்தான் அனைவரையும் கோபப்படச் செய்துள்ளது.

ஒரு குடும்பத்தினர் பெட்ரோல்,​​ உணவுப்பொருள்,​​ ஆடம்பரப்பொருள் ஆகிய பலவற்றுக்காகச் செலவிடும் பணத்தை ஒப்பிடும்போது சர்க்கரை விலை உயர்வினால் அக் குடும்பத்தின் மாதச் செலவில் ரூ.60 முதல் 90 வரை அதிகரிப்பது ஒரு பெரிய சுமை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளதை,​​ மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது,​​ உண்மை போலவே தோற்றம் தரும்.

இன்னும் ஒரு படி மேலேபோய்,​​ "சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் நோய்கள் ஏற்படுகின்றன' என்று சொல்லும்போதும்,​​ "உப்பும் சர்க்கரையும் வெள்ளை விஷம்' என்று மருத்துவ உண்மைகள் பேசும்போதும்,​​ சர்க்கரை விலை உயர்ந்தால் நாட்டின் சுகாதாரம் பெருகும் என்றும் மக்களை நினைக்க வைத்துவிடவும் செய்வார்கள்.​ ஆனால் இவையெல்லாம் சரியான வாதமா என்று பார்த்தால்,​​ இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

சாதாரண தரம் கொண்ட சர்க்கரையின் விலை கடந்த ஓராண்டில் ஒரு கிலோ ரூ.22லிருந்து ரூ.42 வரை உயர்ந்துள்ளது என்றால்,​​ இதன் அடுத்தடுத்த தாக்கம் இனிப்பு பொருள்களில் மட்டுமன்றி,​​ சாதாரண தேநீர் கடையில் காபி,​​ டீ விலை உயர்வுக்கும் காரணமாக இருக்கிறது என்பதும்,​​ இது ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் கூடுதல் செலவினத்தை ஏற்படுத்துகிறது என்பதும் அமைச்சருக்கோ,​​ அல்லது அவருடைய கொள்கை முழக்கப் பத்திரிகைக்கோ தெரியாதது அல்ல.​ ஆனாலும்,​​ அவர் எதையாவது சொல்லி தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.​ ​

மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விநியோகத்துக்காக கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த 72,684 டன் சர்க்கரையை ரூ.123 கோடி லாபத்துக்கு தனியார் சர்க்கரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது ஏன்?​ என்று ஒரு சங்கடமான கேள்வியை ஆங்கில நாளிதழ்,​​ முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு முந்தைய நாள் வெளியிட்டதால்,​​ இதையெல்லாம் சமாளிக்கும் விதத்தில் இந்தக் கட்டுரையை "ராஷ்டிரவாதி' வெளியிட்டுள்ளது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக அளவு கரும்பு சாகுபடி நடைபெறுகிறது.​ 570 சர்க்கரை ஆலைகளில் 35 கோடி டன் கரும்பு பிழியப்படுகிறது.​ ஆனால் இந்தியாவில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.13.50க்கும்,​​ வெளிச்சந்தையில் சர்க்கரையின் தரத்துக்கேற்ப ரூ.35 முதல் ரூ.60 வரைக்கும் கிடைக்கிறது.​ ​ சர்க்கரை விலை உயர்வு மக்களை பாதிக்காதது உண்மையாக இருக்குமென்றால்,​​ ஏன் இந்த இரு விதமான விலை நிர்ணயம்?

மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின்போது,​​ ரேஷன் கடைக்கும் வெளிச்சந்தைக்கும் வேற்றுமை இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை ஒரே விதமாக அமைந்திருந்தது.​ ஆனால்,​​ அதன் பிறகு அத்தகைய சமநிலை ஏற்படவே இல்லை.​ பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் அது சாத்தியமாகவே இல்லை.

சர்க்கரை விலை உயர்வு மக்களைப் பெரிதாக பாதித்ததா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும்,​​ இந்த விலை உயர்வால் சர்க்கரை ஆலைகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்ததா இல்லையா?​ சர்க்கரை விலை உயர்வு மிகக் குறைவு என்ற வாதம் உண்மையாக இருக்குமானால்,​​ இந்த கொள்ளை லாப சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை விலை உயர்த்தாமல் மக்களுக்கு வழங்கி சேவை செய்திருக்கலாமே!​ சர்க்கரை ஆலைகளின் நண்பர் என்று கருதப்படும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார்,​​ தானே இவர்களிடம் பேசி,​​ மக்கள் நலனுக்காக இந்தச் சின்ன விலை உயர்வை தடுத்திருக்கலாமே!​ ஏன் செய்யவில்லை?

சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சில மாதங்களுக்கு முன்பு சரத் பவார் அறிவித்திருந்தார்.​ இதன்படி டிசம்பர் 2010 வரை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சுங்கவரி இல்லாமல் சர்க்கரையை இறக்குமதி செய்துகொள்ளலாம்.​ இந்த அளவுக்கு சர்க்கரை ஆலைகள் மேல் அன்பு காட்டும் பவார்,​​ ஏழை விவசாயிகள் மீது அன்பு பாராட்டவில்லை என்பது அனைவரும் அறிந்தது.​ இப்போது சர்க்கரை நுகர்வோர் எவரைப் பற்றியுமே அவர் கவலைப்படவில்லை என்பதுதான் அவர் ஆளுமையின் புதிய வெளிப்பாடு.

இந்தியா முழுவதிலும் 4.5 கோடி விவசாயிகள் கரும்பு பயிரிடுகிறார்கள்.​ அவர்கள் சாகுபடி செய்து கொண்டுவந்து தரும் கரும்புக்கு உரிய,​​ நியாயமான விலையை கொடுத்தாலே அவர்கள் விலைஉயர்வை ஓரளவு சமாளிப்பார்கள்.​ ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,​​ ஆலைகளுக்கு சாதகமாக சட்டத் திருத்த மசோதா கொண்டுவரும் மத்திய வேளாண்மைத் துறை,​​ சர்க்கரை விலை உயர்வால் பாதிப்பில்லை என்பதை மட்டுமே நியாயப்படுத்த முயல்கிறது.

மாநில அரசுகளின் ஆதரவு விலையை ஆலைகள் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்ற சட்டப் பிரிவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதால்,​​ அதை மட்டுமே நீக்கினார்கள்.​ ஆனால்,​​ எரிசாராய விற்பனையில் விவசாயிக்கு கணிசமான பங்கு பற்றியும் கண்டுகொள்ளவில்லை.​ ஆலைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வேறு சலுகைகளும் அப்படியே அந்த திருத்தப்பட்ட சட்ட மசோதாவில் தொடரவே செய்தன.​ ​

விலைஉயர்வு தாங்கவில்லை என்று துடிக்கிறபோது சர்க்கரை விலையால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்வது அவர்களது மனநிலையை அம்பலமாக்குகிறது.​ ​ "....பசி தீரும்' என்றால் "உயிர் போகும்' எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ' என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசனை நினைவுகூர வைத்துவிட்டார்கள்.