Sunday, February 28, 2010

பக்கவாதத்தை நீக்கும் இசை மருத்துவம்

சான்டியாகோ : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரையை விட, இசை மூலம் அளிக்கும் மருத்துவம் அதிக முன்னேற்றத்தை அளிக்கும் என்று ஒரு நரம்பியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த காட்ப்ரைட் சாலக் என்ற நரம்பியல் பேராசிரியர், தன்னிடம் வந்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தான் அளித்த இசை மருத்துவம் குறித்து ஒரு வீடியோ எடுத்துள்ளார். அதில், அந்த நோயாளியிடம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடும் பாடலான "ஹேப்பி பர்த்டே டூ யூ' என்ற பாடலை வாசிக்கச் சொன்னார். அந்த நோயாளியின் இடது மூளை பாதிக்கப்பட்டு அதனால் வலது பக்கம் செயலிழந்து போனது. நோயாளியால் அந்த வார்த்தைகளை அட்சர சுத்தமாகச் சொல்ல இயலவில்லை. உடனே பேராசிரியர் அந்தப் பாடலைப் பாடும்படி கேட்கிறார். நோயாளி அந்தப் பாடலைப் பாட முயற்சி செய்து கிட்டத்தட்ட தெளிவாகவே அதைப் பாடி விடுகிறார். இது எப்படி சாத்தியம்?

அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகத்தில் உரை நிகழ்த்திய பேராசிரியர் கூறுகையில்,"பொதுவாக இடதுபக்க மூளை தான் பேச்சுத்திறனை நிர்வகிப்பது. நான் அளிக்கும் இந்த இசை மருத்துவத்தால் அந்த இடதுபக்க மூளையில் சில மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு பின்பு நோய் குணமாக வாய்ப்பு இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்த சிகிச்சைக்காக அவர் தனியாக ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். "இதற்காக ஒரு நல்ல பாடகர்தான் வேண்டும் என்பதில்லை. ஆனாலும் இந்த சிகிச்சைக்கு நீண்ட காலம் தேவை. அதே நேரம் செலவும் கொஞ்சம் அதிகம்தான்' என்கிறார் பேராசிரியர்.