ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று தெரிவிப்பதும், இன்னொருபுறம் எந்தவிதக் காரணமுமின்றி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதும் பாகிஸ்தானுக்கு வழக்கமாகிவிட்டது. நேற்று, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியிலுள்ள 5 பாதுகாப்புச் சாவடிகளின் மீது ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதோடு, இயந்திரத் துப்பாக்கி மூலம் இந்தியச் சாவடிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாகச் சுட்டிருக்கிறது.
இப்படி பாகிஸ்தான் அத்துமீறல் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 11 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதுடன், கடந்த ஓராண்டில் மட்டும் குறைந்தது 485 தடவைகள் பாகிஸ்தான் ராணுவத்தின் மறைமுக உதவியுடன் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றிருக்கிறார்கள். ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தை என்று இஸ்லாமாபாதிலுள்ள ஆட்சியாளர்கள் பேசுவதும், எல்லைப் பகுதியில் ராணுவம் அத்துமீறுவதும் மட்டுமல்ல, அதை நாம் வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது என்பதுதான் வேதனை.பத்து நாள்களுக்கு முன்னால், சீனா சென்றிருந்தார் பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் ஷா மகமூத் குரேஷி.
இந்திய வெளிவிவகாரத் துறைச் செயலர் நிருபமா ராவின் கருத்தான எல்லை கடந்த தீவிரவாதம் பற்றி மட்டுமே சர்ச்சை என்பதை நிராகரித்த அவர், காஷ்மீர் உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் பற்றிப் பேசினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அர்த்தம் இருக்கும் என்று கூறியபோதே, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளால் பயன் இருக்காது என்பது தெரிந்துவிட்டது.போதாக்குறைக்கு, அவர் இன்னொரு புதிய சர்ச்சைக்கும் சீன மண்ணிலிருந்து பிள்ளையார் சுழி போட்டார்.
இந்திய-பாகிஸ்தான் உறவைச் சீர்படுத்த சீனாவின் உதவியை நாடுவது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க சீனா சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதும்தான் அவரது விபரீத யோசனை.இப்படி ஒரு யோசனையை முன்வைக்கும்போது, அதை இந்தியா நிராகரிக்கும் என்பதும், உடனே, சீனாவுக்குப் பதிலாக அமெரிக்காவின் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்கிற மாற்று யோசனையை முன்வைப்பதும்தான் பாகிஸ்தானின் திட்டம்.அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடட்டும் என்று பாகிஸ்தான் கருத்தை முன்வைத்தால் அதை மன்மோகன் சிங் அரசால் நிராகரிக்க முடியாது என்பது குரேஷிக்குத் தெரியாதா என்ன? நல்லவேளை இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாவது நாடு எதுவும் தலையிடுவதோ, சமரசத்தில் ஈடுபடுவதோ எங்களுக்கு ஏற்புடையதல்ல என்று தெளிவுபடுத்தி வெளிவிவகார அமைச்சகம், பாகிஸ்தானின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருப்பதுபோல, சீனாவும் அமெரிக்காவும் இந்திய-பாகிஸ்தான் பிரச்னையில் தங்கள் மூக்கை நுழைக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன என்பது புதிய தகவலல்ல.
அமெரிக்காவையும், வல்லரசு நாடுகளையும் பொறுத்தவரை, அவர்களது குறிக்கோள் காஷ்மீர் மட்டுமே. காஷ்மீரைத் தனி நாடாக்கித் தங்களது கைப்பாவையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரிட்டிஷார் தொடங்கி அமெரிக்கா வரையிலான மேலை நாடுகளின் லட்சியம்.ஆசியாவின் வயிற்றுப் பகுதி என்று கருதப்படும் காஷ்மீரில் ராணுவத் தளத்தை ஒரு நாடு நிறுவி விட்டால், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா, ரஷியா, சீனா, இந்தியா என்று காஷ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை நாடுகளையும் தனது கண்காணிப்பில் வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் காஷ்மீர் கனவுக்கு அடிப்படைக் காரணம்.
எப்போதோ முடித்திருக்க வேண்டிய காஷ்மீர் பிரச்னை முடியாமல் தொடர்வதற்குக் காரணமே, வல்லரசு நாடுகள், இந்தியாவிடம் காஷ்மீர் போய் விடாமல் பார்த்துக் கொள்வதால்தான்.கடந்த வாரம் இந்திய-பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர்களின் பேச்சுவார்த்தை புதுதில்லியில் நடந்தது. பேச்சுவார்த்தையில் எந்தவிதத் தீர்மானமும், முடிவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சந்திக்காமலோ, விவாதிக்காமலோ இருந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்பதும், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாதில் இந்த மாதம் நடக்க இருக்கிறது என்பதும் வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றம்.இதற்கிடையில், ""இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லாவிட்டால், என்ன விலை கொடுத்தாலும் சரி பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடங்க வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்திருப்பது யார் தெரியுமா? மும்பைத் தாக்குதல் சம்பந்தப்பட்ட ஜமாத்-உத்-தவா தலைவர் ஹஃபீஸ் முகம்மது சைய்யீத்.இன்னொருபக்கம், எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருவதாக இருந்தால் மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவே முடிவு செய்து கொள்ளட்டும்'' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறது பாகிஸ்தான் வெளிவிவகாரத் துறை.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை எதுவும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்கிற நிலைமை. ராணுவம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை; அரசாங்கமும் சரி, ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆட்சியாளர்கள் மட்டுமென்ன? ஒன்று, மதவாதிகளின் கட்டுப்பாட்டிலோ, இல்லையென்றால் அன்னிய சக்திகளின் ஆதரவிலோ பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.எல்லை கடந்த தீவிரவாதம் பற்றியும், அதைக் கட்டுப்படுத்துவது பற்றியும் இந்தியா பேச்சுவார்த்தையில் கேள்வி எழுப்பினால் அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ சக்தி இல்லாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அரசு என்னதான் செய்யும்? அதற்கு பாகிஸ்தான் கையாளும் யுக்திதான் பிரச்னையைத் திசைதிருப்பும் முயற்சிகள்.
காஷ்மீர் பிரச்னையைக் கிளப்பினால், பயங்கரவாதத்தைத் தடுப்பது பற்றிய பேச்சு திசை திரும்பிவிடும். இல்லையென்றால், பேச்சுவார்த்தை முறிந்து விடும். அப்படியும் விடாப்பிடியாக இந்தியா, சுய கௌரவத்தை இழந்தாலும் பரவாயில்லை என்று பேச்சுவார்த்தைக்குத் தயாரானால், ராணுவம் எல்லையில் அத்துமீறல்களை நடத்திப் பேச்சுவார்த்தையை முடக்க முற்படும்.ஒரு நிலையான, பலமான ஜனநாயக ரீதியிலான நல்லரசு பாகிஸ்தானில் அமையாதவரை, பேச்சுவார்த்தைகளால் பயன் இருக்குமா என்பது சந்தேகம்தான். பக்கத்து வீட்டுக்காரர் மோசமானவராக இருந்தால், வீட்டை மாற்றிக் கொண்டு போய்விடலாம். அண்டை நாடு மோசமாக இருந்தால்...? சகிப்பதைத் தவிர வழி வேறொன்றும் இல்லை!
-