இடமாறுதல் ஆணை பெற்று வேறு ஊருக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கும், பெரிய தனியார் நிறுவனங்களில் பல ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கிடைப்பதால் இடம் பெயர்வோருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னைகள் புதிய இடம், புதிய மனிதர்கள், கலாசாரம், மொழி சார்ந்ததாக மட்டுமே இருக்கும். ஆனால், என்ன தொழில் செய்வோம் என்பதே தெரியாமல், தங்கள் உடலுழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூட்டை முடிச்சுகளுடனும் குழந்தைகளுடனும் வெளியேறும் சாதாரண ஏழைகளின் நிலைமை எண்ணிப் பார்க்க முடியாத துயரமாகத்தான் இருக்கிறது.
2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களின்படி, 102 கோடி மக்கள்தொகையில் 30 கோடி பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 24 கோடி பேர் (84.2 சதவீதம்) மாநிலத்துக்குள்ளாகவே மாவட்டத்தைவிட்டு வெளியேறியும் அல்லது மாவட்டங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 4.5 கோடி பேர் (13.8 சதவீதம்) வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
1981-ம் ஆண்டு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்களின் எண்ணிக்கை 12-ஆக இருந்தது. 1991-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்த எண்ணிக்கை 23 நகரங்களாக மாறியது. 2001-ம் ஆண்டு 35 நகரங்களாக உயர்ந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இவ்வாறு பிழைப்பைத் தேடி வெளியேறும் சாதாரண ஏழைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாழ்க்கையின் நெருக்கடி, குடும்ப வறுமை, பொய்த்துப்போன விவசாயம், உள்ளூரில் வேலை கிடைக்காத நிலை என்று பல்வேறு காரணங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை. சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்தின்படி, இந்த எண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்திருக்கும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இதுபற்றிய உண்மைகள் அப்பட்டமாகத் தெரியவரும்.
பெருந்தொழில்களும் நெடுஞ்சாலைகளும் கிராமங்களைக் கிழித்துப்போடும்போது, இவர்கள் வாழ்க்கையையும் சேர்த்தே கிழித்துவிடுகிறது. விவசாய நிலங்களுக்காக இவர்களுக்குத் தரப்படும் இழப்பீடுகள் ஓராண்டுக்குமேல் கையில் இருப்பதில்லை. உடலுழைப்பைத்தவிர வேறு தொழில் தெரியாத நிலைமையும், குடிப்பழக்கமும், படிப்பறிவின்மையும் இவர்களின் பணத்தைக் கரைத்துவிடுகிறது. விவசாய நிலவுடைமைக்காரரும் வயலில் வேலை செய்யும் விவசாயக்கூலியும் - இரு குடும்பங்களுமே வெளியேறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றன. பென்னாகரம் தொகுதியில் 25 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது, அரசியல் கட்சிகளால் பிரச்னையாக்கப்பட்டது. மீண்டும் 13 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இதன் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் சமூகவியல் மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளும் இத்தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும், மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் யார்யார் என்பதையும் வீடுதேடிச் சென்று ஆய்வு நடத்தினால் துயரம் தோய்ந்த பல்வேறு உண்மைகள் வெளிப்படும். இவர்களில் 90 சதவீதம்பேர் பிழைப்பைத் தேடி வெளியேறியவர்களாக இருப்பார்கள்.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயத்துக்கு வழியில்லாமல், தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு அருகிவரும் நிலையில் கூலித் தொழில் செய்து வாழ்க்கையை நடத்த கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கும் இடம்பெயரும். தமிழர்கள் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் படும் இன்னல்கள்- உள்ளூரிலும் வெளியூரிலும்- ஏராளம்.
உள்ளூரில் இவர்களது குடும்ப அட்டை ரத்து செய்யப்படுவதும், நம்பிக்கையுடன் உறவினர்களுடன் விட்டுச்செல்லப்பட்ட சிறு குழந்தைகள் வீணாகிப் போவதும், இவர்களது சிறு உடைமைகளும் காணாமல்போவதுமான சிக்கல்கள் ஒருபுறம். பிழைப்பைத் தேடிச் சென்ற இடத்தில் தங்க இடம் இல்லாமல் சாலையோரத்தில் ஆதரவற்று வாழ்க்கை நடத்துவதும், பெண் குழந்தைகளும் இளம் பெண்களும் கடத்தப்படுவதும் அல்லது வறுமையால் அவர்கள் வாழ்க்கை சீரழிவதும் ஒருபுறம். இவர்கள் சென்ற இடத்தில், நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்வதாலேயே இவர்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதே இல்லை- கொலை போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளைத் தவிர, சாதாரண விபத்தில் கை, கால்களை இழந்தாலும், கட்டட வேலையின்போது விபத்தில் இறந்தாலும், குறைந்த அளவு இழப்பீடு கொடுத்து, எந்தக் குற்றப் பதிவும் வழக்கும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இத்தனை இன்னல்கள் இருந்தாலும் இவர்கள் இடம்பெயரக் காரணம் வறுமை, வேலையின்மை.
கிராம மக்கள் சாரிசாரியாக நகரங்களை நோக்கிச் செல்வது மிகப்பெரிய அபாயத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தப் போகிறது. இதனை அறியாத அரசும், அரசியல்வாதிகளும், நாமும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருப்பது அதைக் காட்டிலும் பெருந்துயரம்.
இந்த மக்களை மீண்டும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கே திரும்பி வந்து வாழ்வதற்கான விவசாயத் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையும். நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ. 42,000 கோடி ஒதுக்கினாலும், இவற்றில் மிகச் சிறிய தொகை மட்டுமே விவசாயிகளை அடைகிறது என்பதால், இதை நம்பி யாரும் கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. இவர்களுக்காகத் தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டும். இவர்கள் இடம்பெயர்வதைப் பதிவு செய்யவும், இவர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணவும், இவர்களை மீண்டும் அவர்களது மண்ணிலேயே வேரூன்றவும் செய்வதற்கான சிறப்புத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடும் அவசியம். இதற்கென தனி அமைச்சரை நியமித்தாலும் நல்லதுதான்.
-