Wednesday, February 24, 2010

வாழும் வரலாறு சச்சின் 200 நாட்-அவுட்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு தின ஆட்டத்தில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி ஒரு தின ஆட்டங்களில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் 147 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்சர், 25 பெüண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்தார்.

இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் குவாலியரில் புதன்கிழமை நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 42.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சேவாக் அவுட்: ஆட்டத்தின் 2-வது பந்தில் தப்பிப் பிழைத்த சேவாக் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 9 ரன்கள் எடுத்த நிலையில் பார்னெல் பந்துவீச்சில் வெளியேறினார்.

சச்சினுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். சேவாக் வெளியேறியபோதும் இருவரும் இணைந்து விரைவாக ரன் சேர்த்தனர். 7.2 ஓவர்களில் இந்தியா 50 ரன்களைக் கடந்தது.

சச்சின் டெண்டுல்கர் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினார். 37 பந்துகளில் 9 பெüண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் எந்தப் பந்துவீச்சாளரையும் இருவரும் விட்டுவைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் 59 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அபாரமாக விளையாடிய சச்சின் 90 பந்துகளில் 13 பெüண்டரிகளுடன் ஒரு தின ஆட்டங்களில் 46-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். 50 ரன்களில் இருந்து 100 ரன்களுக்குள் வெறும் 4 பெüண்டரி மட்டுமே எடுத்த சச்சின், அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார்.

சச்சின், தினேஷ் இணைந்து 194 ரன்கள் சேர்த்த நிலையில், பார்னெல் பந்துவீச்சில் கிப்ஸிடம் பிடிபட்டு தினேஷ் கார்த்திக் வெளியேறினார். அவர் 85 பந்துகளில் 3 சிக்சர், 4 பெüண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார்.

சச்சினுடன் அதிரடி வீரர் யூசுப் பதான் இணைந்தார். இருவரும் மனம் போல பெüண்டரிகளாக விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 47 பந்துகளில் 81 ரன்கள் விளாசினர். 23 பந்துகளில் 2 சிக்சர், 4 பெüண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்த யூசுப், வான்டெர் மெர்வ் பந்துவீச்சில் டிவில்லியர்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி விளாசல்: அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் தென் ஆப்பிரிக்க வீச்சாளர்களை பதம் பார்த்தார்.

35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர், 7 பெüண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் விளாசினார். சச்சின், தோனி இணைந்து 54 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தனர்.

காலிஸின் பந்துவீச்சில் பெüண்டரி விளாசி ஒரு தின ஆட்டங்களில் தனது அதிகபட்சத்தைக் கடந்தார் சச்சின்.

ஆட்டத்தின் 46-வது ஓவரில், பார்னெல் பந்துவீச்சில் 2 ரன்கள் எடுத்து 194 ரன்களையும் கடந்து உலக சாதனை படைத்தார். ஆனால், அதன் பின்னர், ஒரு முனையில் மிகவும் அதிரடியாக விளையாடிய தோனி 47, 48, 49-வது ஓவர்களின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தார்.

மறு முனையில் 199 ரன்களுடன் சச்சின் களத்தில் இருந்தார். ஒருவழியாக கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்து சச்சினுக்கு வழிவிட்டார் தோனி. அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து வரலாற்றில் இடம்பெற்றார் சச்சின்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா சொதப்பல்: 402 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் டிவில்லியர்ஸ் தவிர ஒருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டிவில்லியர்ஸ் சிறப்பாக விளையாடி 101 பந்துகளில் 2 சிக்சர், 13 பெüண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆம்லா தொடக்க வீரராக களம் இறங்கி 22 பந்துகளில் 7 பெüண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.

2-வது விக்கெட்டுக்கு சாதனை: சச்சின், தினேஷ் இணைந்து 194 ரன் குவித்ததே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் 2-வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் குவிப்பாகும். 2000-ம் ஆண்டில் நாகபுரியில் சச்சின், திராவிட் இணைந்து 181 ரன்கள் குவித்ததே இதற்கு முந்தைய அதிகபட்சமாகும்.

ஒரு தின ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சம் இது.

ஒரு தின ஆட்டங்களில் சச்சினின் அதிகபட்சம் இது. இதற்கு முன் 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக ஹைதராபாதில் ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.

குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து: கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு முறை எவரெஸ்ட் சிகரத்தை சச்சின் எட்டிப் பிடித்துவிட்டார் என குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலும், அவரது சாதனையால் இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் தங்கள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

ஸ்கோர் போர்டு இந்தியா

சேவாக் (சி) ஸ்டெயின் (பி) பார்னெல் .... 9

சச்சின் (நாட் அவுட்) ......................... 200

தினேஷ் கார்த்திக் (சி) கிப்ஸ்

(பி) பார்னெல் ......................................79

யூசுப் பதான் (சி) டிவில்லியர்ஸ்

(பி) வான் டெர் மெர்வ் ........................ 36

தோனி (நாட் அவுட்) ........................... 68

உதிரி ................................................... 9

மொத்தம்: 50 ஓவர்களில்

3 விக். இழப்புக்கு ...............................401

விக்கெட் வீழ்ச்சி: 1-25 (சேவாக்), 2-219 (தினேஷ்), 3-300 (பதான்).

பந்துவீச்சு

ஸ்டெயின் ............................... 10-0-89-0

பார்னெல் ................................ 10-0-95-2

வான் டெர் மெர்வ் ................... 10-0-62-1

லாங்வெல்ட் ............................ 10-0-70-0

டுமினி ....................................... 5-0-38-0

காலிஸ் ......................................5-0-44-0

தென் ஆப்பிரிக்கா

ஆம்லா (சி) நெஹ்ரா (பி) ஸ்ரீசாந்த் ...... 34

கிப்ஸ் (பி) குமார் ................................. 7

வான் டெர் மெர்வ் (சி) ரெய்னா

(பி) ஸ்ரீசாந்த் ....................................... 12

காலிஸ் (பி) நெஹ்ரா ........................... 11

டிவில்லியர்ஸ் (நாட் அவுட்) ...............114

பீட்டர்சன் (பி) ஜடேஜா .......................9

டுமினி எல்பிடபிள்யூ (பி) பதான் .......... 0

பெüச்சர் எல்பிடபிள்யூ (பி) பதான் ..... 14

பார்னெல் (பி) நெஹ்ரா ....................... 18

ஸ்டெயின் (பி) ஸ்ரீசாந்த் ........................0

லாங்வெல்ட் (சி) நெஹ்ரா

(பி) ஜடேஜா ....................................... 12

உதிரி....................................................17

மொத்தம் 42.5 ஓவர்களில்

அனைத்து விக். இழப்புக்கு ................248

விக்கெட் வீழ்ச்சி: 1-17 (கிப்ஸ்), 2-47 (வான் டெர் மெர்வ்), 3-61 (ஆம்லா), 4-83 (காலிஸ்), 5-102 (பீட்டர்சன்), 6-103 (டுமினி), 7-134 (பெüச்சர்), 8-211 (பார்னெல்), 9-216 (ஸ்டெயின்), 10-248 (லாங்வெல்ட்).

பந்துவீச்சு

பிரவீன் குமார் ............................ 5-0-31-1

நெஹ்ரா ..................................... 8-0-60-2

ஸ்ரீசாந்த் ..................................... 7-0-49-3

ஜடேஜா .................................. 8.5-0-41-2

பதான் ........................................ 9-1-37-2

சேவாக்........................................5-0-25-0

அதிகபட்ச ரன் விளாசியவர்கள்

வீரர் நாடு ரன் எதிரணி இடம் ஆண்டு

சச்சின் இந்தியா 200* தெ.ஆ. குவாலியர் 2010

கோவென்ட்ரி ஜிம். 194* வ.தே. புலவாயோ 2009

அன்வர் பாக். 194 இந்தியா சென்னை 1997

ரிச்சர்ட்ஸ் மே.இ. 189* இங்கி. மான்செஸ்டர் 1984

ஜெயசூர்யா இலங்கை 189 இந்தியா ஷார்ஜா 2000