Wednesday, February 24, 2010

மேலும், ஒரு சுமை!

ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து யூரியா உரத்தின் சந்தை விலை டன் ஒன்றுக்கு ரூ.480 உயர்கிறது. அதாவது ரூ.4830-லிருந்து ரூ.5310 ஆகப் போகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவை விளக்கிய மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இதைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

"யூரியா விலையை உயர்த்த வேண்டாம்' என்று இந்தியப் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். "நான் இப்போதும் விலை உயர்வை எதிர்க்கிறேன்' என்று மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இதைப் பற்றி மத்திய அரசில் யாரும் பொருள்படுத்தியதாகவே தெரியவில்லை. மத்திய அரசில் பங்குகொண்டுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு அமைச்சராக இருப்பவருக்கு இதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரும் மரியாதையா?

நிச்சயமாக யூரியா விலை உயரப் போகிறது. அரசின் புதிய உரமானிய அணுகுமுறையால் மற்ற உரங்களின் விலையும் உயரத்தான் போகிறது. ஏற்கெனவே, உணவுப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் நிலையில், உரவிலை அதிகரிப்பால் மேலும் கட்டுக்கடங்காமல் போகப்போகிறது.

உலகில் அதிக அளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உரங்கள் தேவைக்குப் போதுமானதாக இல்லை. 2008-09-ம் ஆண்டில் இந்தியா 68 லட்சம் டன் யூரியா, 20 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) இறக்குமதி செய்தது. ஆண்டுதோறும் இந்தியாவின் உரங்கள் தேவை சுமார் 2 சதவீதம் அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு இல்லாததால், குறிப்பாக யூரியாவின் தேவை ஆண்டுதோறும் 3 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தேவை அதிகம் என்பதால் உலகின் உர உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு நல்ல சந்தை என்றுதான் பொருளாதார ஏடுகள் எழுதுகின்றன.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, 2009-10-ம் ஆண்டில் வழக்கத்தைவிட 7.5 சதவீதம் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் உற்பத்தி 12 சதவீதம் வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யூரியா விலை உயர்வு தேவைதானா? ஏற்கெனவே விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப் பிரச்னையில் தொடர்புடைய அமைச்சரே தனது எதிர்ப்பை வெளிப்படையாக அறிவிப்பு செய்யும் நிலையில், இத்தகைய முடிவு அவசியமா என்ற கேள்வி எழுகிறது.

உரமானியமாக 49,980 கோடி ரூபாய் அளிக்கிறோம் என்று மத்திய அரசும் நிதியமைச்சகமும் நீலிக்கண்ணீர் வடித்தாலும், அந்த மானியம் விவசாயிகளைச் சென்றவடைவது மிகமிகக் குறைவு என்பதும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான உரநிறுவனங்களுக்குத்தான் அதிகம் போய்ச் சேருகிறது என்பதும் விவரம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

இயற்கை எரிவாயு அதிகம் கிடைக்காத நாடுகளால் யூரியா உற்பத்தி செய்ய முடிவதில்லை என்றும், அத்தகைய நாடுகள் இறக்குமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே யூரியாவைத் தயாரித்து விற்பனை செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஏனென்றால் இந்தியா போன்று யூரியா சந்தை கிடைப்பதென்றால் சாதாரண விஷயமா என்ன! ஆனால் அவர்கள் முன்வைக்கும் ஒரே நிபந்தனை, உரத்தின் விலையை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். உரத்தைப் பொதுச் சந்தையில் தாங்களே விற்பனை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

யூரியாவின் விலையை உயர்த்துவது, உரங்களின் ஊட்டச்சத்து அடிப்படையில் மானியம் வழங்குவது, மானியத்தை விவசாயம் செய்யும் விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்காமல், உற்பத்தி செய்யும் உர நிறுவனங்களுக்கு அளிப்பது போன்ற குளறுபடியான கொள்கைகளால் இந்தியாவில் யாரோ சிலர் கொழிக்கவும், வேளாண்மை பாதிக்கவும் செய்கிறது. விவசாயிகள் மேலும் வறியவர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள்.

யூரியா ஒரு டன்னுக்கு ரூ.480 விலை உயர்வு என்பது மிகமிகக் குறைவு என்றும், ஒரு கிலோவுக்கு வெறும் 50 காசுகள் அளவில்தான் விலை உயர்வு என்று சொன்னாலும், விவசாயிக்கு செலவு கூட்டும் ஒவ்வொரு காசும் ஒரு சுமைதான் என்பதை அரசு புரிந்துகொள்ளவில்லை.

தொழில்துறைக்குத் தாராளமான சலுகைகளை அள்ளி வழங்குகிறது மத்திய அரசு. அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அப்படியே நிறைவேற்றுகிறது. ஆனால், விவசாயி விளைவித்த பொருளுக்கு, அவன் செலவு செய்த மொத்தத் தொகையில் கூடுதலாக 50 சதவீதத் தொகையைச் சேர்த்து, ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும் என்று எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரை மட்டும் அரசின் கண்ணுக்கே தெரிய மாட்டேன் என்கிறது.

விவசாயிகளின் பொருளுக்கு கொள்முதல் விலையை எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் அளித்த பரிந்துரைப்படி நிர்ணயம் செய்துவிட்டு, யூரியாவுக்கு விலையை மத்திய அரசு உயர்த்துமானால் அந்த முடிவை யார் எதிர்க்க முடியும்? ஆனால் விவசாயிக்கு எதையுமே தராமல், சுமையை மட்டுமே கூட்டுவதென்றால் என்ன நியாயம்?

சென்ற ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் வெள்ளம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், குறுவை சாகுபடிக்கு எல்லாரும் தயாரான நிலையில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. உரங்கள் பதுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகுதான் அரசு நடவடிக்கை எடுத்தது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், ஆந்திரத்துக்கு கடத்தப்பட்டதாக சில டன் உரமூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிலர் மீது நடவடிக்கையும் எடுத்ததாகச் செய்திகள் வந்தன. ஆனால் என்ன ஆயிற்று? தண்டிக்கப்பட்டார்களா? யாருக்கும் தெரியாது.

இந்த ஆண்டும் அதேதான் நடக்கப் போகிறது. பழைய உரங்களைப் பதுக்கி வைத்து, புதிய உரத்தின் விலையோடு இன்னும் பதுக்கல் செலவுகளையும் சேர்த்துவைத்து விற்கப்போகிறார்கள்.

விவசாயிகள் களைகளைப் பிடுங்கிப் போடுகிறார்கள், பயிரைக் காப்பதற்காக. அரசாங்கமோ விவசாயிகளையே பிடுங்கி வீசுகிறது, பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக!