Monday, February 15, 2010

ஆமை வேகத்தில் பள்ளி கட்டண நிர்ணயிப்பு குழு: கட்டண வசூலில் பள்ளிகள் தீவிரம்

பள்ளிகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஆமை வேகத்தில் செயல்பட்டு வருவது, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 75 சதவீத பள்ளிகள் ஏற்கனவே கட்டணங்களை வசூலித்து முடித்த நிலையில், மீதியுள்ள 25 சதவீத பள்ளிகளும் கட்டண வசூலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பள்ளிகளின் வேகத்தைக் கண்டு, என்ன செய்வதென புரியாமல் பெற்றோர் திகைப்படைந்துள்ளனர்.


தனியார் பள்ளிகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தி, நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும், தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், கல்வித் துறை அதிகாரிகள் பலர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். குழுவின் செயல்பாடுகள் குறித்து, சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளைக் கண்டு, பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். "குழு தீர்மானிக்கும் கட்டணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும்; கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். குழுவின் விதிமுறைகளை மீறும் பள்ளி நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்' என்றெல்லாம் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


இந்தச் சட்டம், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான அதிகார செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, குழுவின் அதிரடி நடவடிக்கையால் பெற்றோருக்கு நிம்மதி கிடைக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், குழு அமைக்கப்பட்டதில் இருந்து, அதன் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இருந்து வருகின்றன. வரும் கல்வியாண்டுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு துவங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகளிடம், கட்டண வசூலிப்பு புள்ளி விவரங்களை பிப்ரவரி 5ம் தேதிக்குள், குழு முன் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. தனியார் பள்ளிகளின் அமைவிடம், மொத்த பரப்பளவு, உள்கட்டமைப்பு வசதிகள், கட்டண வகைகள் உட்பட 41 விவரங்கள் கேட்கப்பட்டன. இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளும் தந்துள்ளதாக, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தனியார் பள்ளிகள் சமர்ப்பித்த கட்டணங்கள் மீது, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.


குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை எதிர்பார்த்து காத்திருக்காமல், 75 சதவீத பள்ளிகள் ஏற்கனவே கட்டணத்தை வசூலித்து முடித்துள்ளன; மீதமுள்ள 25 சதவீத பள்ளிகளும், தற்போது கட்டண வசூலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பெற்றோர் என்ன செய்வதென புரியாமல், திகைப்படைந்துள்ளனர். "மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை இப்போது மேற்கொள்ளக்கூடாது; மே முதல் வாரத்தில் தான் இந்தப் பணிகளை துவக்க வேண்டும்' என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் தெரிவித்தது. ஆனால், இதை யாருமே காதில் வாங்காமல், கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.


புதிய கட்டணம் எப்போது அமலுக்கு வரும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "தனியார் பள்ளிகளிடம் இருந்து பெற்ற ஆவணங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், பள்ளி வாரியாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின், தனியார் பள்ளிகளின் இட அமைப்பு, உள்கட்டமைப்பு, நிர்வாகத்திற்கு ஏற்படக்கூடிய அடிப்படைச் செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்' என்றார். இந்தப் பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. அதன் பின், மே மாதத்தில் புதிய கட்டண அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குழுவின் செயல்பாடுகள் ஆமை வேகத்தில் இல்லாமல், அதிரடியாகச் செயல்பட்டு, நியாயமான கட்டணத்தை விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்