இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் யார் அந்தக் கோடீஸ்வரர் (கோன் பனேகா கரோர்பதி) நிகழ்ச்சி இப்போது நடந்துகொண்டிருந்தால், அதில் கடைசியாகக் கேட்கப்படும் கோடி ரூபாய்க்கான கேள்வி விலைவாசி உயர்வுக்கு யார் காரணம் என்பதாக இருந்திருக்கலாம். நான் இல்லை என்பதுதான் சரியான பதில் என்றுகூட முடிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பரிசுத் தொகையான ஒரு கோடி ரூபாய் பொதுமக்களில் யாருக்கும் கிடைத்திருக்காது. மத்திய ஆட்சியாளர்களில் ஒருவருக்குத்தான் கிடைத்திருக்கும்.
விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ன என்பதை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்காமல், அதற்கு நான் காரணம் இல்லை என்று பொறுப்பைத் தட்டிக் கழிப்பதில் மத்திய அமைச்சரவையில் கடும் போட்டி நிலவுகிறது. மக்களாட்சியை மலையாய் நம்பி மீண்டும் மீண்டும் வாக்களித்து வாழ்க்கையே போராட்டமாகிப்போன திருவாளர் பொதுஜனம் எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று முனகுவது இப்போதுதான் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
ஏறுமுகத்திலேயே இருக்கின்ற விலைவாசியை எதிர்கொள்வதோடு மக்களின் பிரச்னைதீர்ந்துவிடுவதில்லை. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை என்று ஒரு விலை அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிற வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை ஒவ்வொன்றை வாங்கும்போதும் பொதுமக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.
சிறுகச்சிறுகச் சேமித்த பணத்தில் மிக்ஸி ஒன்று வாங்குவதற்காக ஒரு தொழிலாளி கடைக்குச் செல்கிறார். அதிகபட்ச விலையான ஆயிரம் ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாயைக் கடைக்காரர் தள்ளுபடி செய்தவுடன், தொழிலாளி ஆனந்தமடைந்து பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கிக்கொண்டு கடைக்காரரைக் கைகூப்பி வணங்கிச் செல்கிறார். அதே பொருளை வேறொரு கடையில் வாங்கச் செல்லும் மகளிர் ஒருவருக்கு இந்தக் கொடுப்பினைகூட இல்லை. அந்தக் கடைக்காரர், அதில் குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையான ஆயிரம் ரூபாய்க்கே லாபமின்றித் தருகிறேன் என்று கூறவும், அப்பெண்மணியும் சலுகையை எண்ணி மகிழ்ந்தவராய் அதை வாங்கிச் செல்கிறார். இருவருமே ஏமாற்றப்படுகிறோம் என்பது அந்தப் பாமரர்களுக்குத் தெரிவதில்லை.
1990-ம் ஆண்டுவரை பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள்மீது அதிகபட்ச சில்லறை விலையுடன் உள்ளூர் வரிகள் தனி என்றுதான் குறிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் வரிகள் ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு என்பது பாமரர்களுக்குத் தெரியாத நிலையில், சில்லறை வியாபாரிகள் வரி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைச் சரிசெய்யும் நல்ல நோக்கத்தோடு எடைகள் மற்றும் அளவைகள் நிர்ணயச் சட்டத்தின்கீழ் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களுக்கான விதியைத் திருத்தி, வரிகள் உள்ளிட்ட அதிகபட்ச விலையைக் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. எந்தக் காரணம் கொண்டும் அதிகபட்ச விலையைவிடக் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இப்போதும் அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்குப் பொருள்கள் பெரும்பாலும் விற்கப்படுவதில்லை. எனினும் பேக்கிங் செய்யப்பட்ட பொருள்கள் மீது குறிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச சில்லறை விலை என்பது அநியாயமான விலை என்பதுதான் உண்மை. அரசாங்க விதிமுறையின்கீழ் அச்சிடப்பட்டிருக்கும் அதிகபட்ச விலையை நம்பி பொருள்களை வாங்குகிற மக்கள் மூன்று நிலைகளில் ஏமாற்றப்படுகிறார்கள்.
எந்த ஒரு பொருளுக்கும் உற்பத்தி விலை அல்லது அடக்க விலை என்பதுதான் அடிப்படையானது. இந்த அடக்க விலையோடு நிறுவனங்கள் விரும்புகிற லாபத்தையும் சேர்த்தால் வருவதுதான் விற்பனை விலை.
இந்த விற்பனை விலையோடு மதிப்புக்கூட்டு வரி, விற்பனை வரி, சொகுசு வரி என்ற பல்வேறு வரிகளில் பொருந்தும் வரிகள் அனைத்தையும் சேர்த்தால் வருவதுதான் அதிகபட்ச சில்லறை விலை.
ஒரு பொருளின் அடக்க விலை என்ன என்பது சிதம்பர ரகசியமாகத்தான் இருக்கிறது. செல்போன் ஒன்றின் விற்பனை விலை இரண்டாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதன் அடக்க விலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பது கூவத்தில் முத்தெடுக்க மூழ்குவதைப் போன்றதுதான்.
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண செல்போன்கள் பன்னாட்டு நிறுவனங்களால் மூவாயிரம் ரூபாய் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டன. அதே நிறுவனங்கள் இப்போது பல வசதிகள் உடைய நவீன செல்போன்களை சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. அப்படியானால் இதைவிடப் பயன்பாடு குறைந்த செல்போன்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அதிக விலைக்கு விற்கப்பட்டபோது அந்த நிறுவனங்கள் கொள்ளை லாபமல்லவா ஈட்டியிருக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி செய்வதற்கும், வியாபாரம் செய்வதற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கின்ற அரசாங்கத்தால் அவர்கள் தயாரிக்கும் பொருள்களின் அடக்க விலை என்ன என்று கேட்க முடியாதா? ஒரு வல்லுநர் குழு அமைத்து பொருள்களின் அடக்க விலையைச் சரிபார்த்து அதற்கேற்ப விற்பனை விலையை நிர்ணயிக்கச் சொல்வது அரசாங்கத்தால் இயலாத காரியம் அல்ல. ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தபோது பொதுமக்கள் தெரிந்தே சுரண்டப்பட்டார்கள். சுதந்திர இந்தியாவில் சுரண்டப்படுகிறோம் என்பது தெரியாமலேயே சுரண்டப்படுகிறார்கள்.
இவ்வாறு அதிக லாபம் வைக்கப்பட்டு விற்பனை விலை முடிவாகும்போதே மக்கள் ஏமாற்றப்படும் படலம் தொடங்கிவிடுகிறது. பிறகு விற்பனை விலையோடு அப்பொருளுக்குப் பொருந்துகின்ற அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்டு அதிகபட்ச விலை அச்சிடப்படுகிறது.
மாநிலங்கள் விதிக்கின்ற வரிகளில் மிகுந்தவேறுபாடு இருப்பதால், அதிகபட்ச வரி எந்த மாநிலத்தில் இருக்கிறதோ அந்த வரியையும் சேர்த்து அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் குறைந்த வரிவிதிப்பு செய்யப்படும் மாநில மக்களும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதை மக்கள் ஏமாற்றப்படும் இரண்டாம் நிலை என்று கொள்ளலாம்.
சில பொருள்கள் மாத்திரம் ஒரு குறிப்பிட்ட மாநில விற்பனைக்கு மட்டும் என்று அச்சிடப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
மொத்த வியாபாரிகள் பொருள்களை நிறுவனங்களிடமிருந்து வாங்கி மாநிலத்திற்கேற்ப வரியையும் ஓரளவு லாபத்தையும் சேர்த்து சில்லறை வியாபாரிகளிடம் விற்கிறார்கள்.
90 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட ஒரு கிலோ எண்ணெய் பாக்கெட், சில்லறை வியாபாரியிடம் வந்து சேரும்போது, அது அவருக்கு 80 ரூபாய்க்குக் கிடைத்ததா அல்லது இன்னும் குறைந்த விலைக்குக் கிடைத்ததா என்பது பொருள் வாங்குபவருக்குத் தெரிவதில்லை. அவரும் 90 ரூபாய்க்கே அதை விற்கிறபோது மக்கள் கடைசி நிலையிலும் ஏமாற்றப்படுகின்றனர்.
ஒரு பொருளின் அடக்க விலை என்ன என்பதை அரசு தெரிந்து கொள்வதில்லை. அதன் விற்பனை விலை மற்றும் லாபம் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்வதிலும் அரசுக்கு ஆவல் இல்லை. விற்கப்படும் மாநிலத்துக்கு உரிய வரிகள் மாத்திரம்தான் அதிகபட்ச விலையில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றியும் அரசுக்குக் கவலை இல்லை. அரசுக்குச் சேரவேண்டிய வரிகளை நிறுவனங்கள் செலுத்திவிட்டால் போதும் "என் கடன் வரிவசூல் செய்வதே' என்பதுதான் அரசின் நிலைப்பாடா என்ற ஐயம் எழுகிறது.
ஒரு பொருளின் அதிகபட்ச சில்லறை விலை உண்மையான விலையைவிட பத்து முதல் முப்பது சதவீதம் வரை அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, மக்கள் தொடர்ந்து ஆளாக்கப்பட்டுவரும் இந்த மோசடியின் தாக்கம் சற்றும் குறைந்ததல்ல. அதிகபட்ச விலையால் மக்கள் ஏமாற்றப்படாமல் இருக்க உடனடித் தீர்வுகாண வேண்டியது மத்திய அரசின் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் காரணத்தால் மட்டும் ஓர் ஆட்சி மக்களாட்சி ஆகிவிடாது. மக்களைச் சுரண்டாமல் பிறரையும சுரண்டவிடாமல் கண்மணியின் பாவைபோல் மக்களைக் காக்கும் ஆட்சியே மக்களாட்சி என்று வரலாறு வழிமொழியும்.
-