Monday, February 15, 2010

இனவெறியா? இனப்பற்றா?

ஆஸ்திரேலியாவின்இனவெறிக் கொள்கை உலகம் அறிந்ததுதான். 1973 வரை அந்நாட்டில் "வெள்ளை ஆஸ்திரேலியா' நிறஒதுக்கல் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர். வெள்ளையர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை மறுத்து வந்தனர். அந்நாட்டின் உண்மையான குடிமக்களான பழங்குடி மக்களை நீண்டகாலம் அந்நாட்டு "மக்கள்தொகை'க் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர்.

÷அறிவியல் முன்னேற்றமும், நாகரிக வளர்ச்சியும் கூட அவர்களைத் திருத்தவில்லை; அண்மைக்காலமாக இவர்களின் கோபம் இந்தியர்களின் மீது திரும்பியிருக்கிறது. இன்னும் தாக்குதல் தொடர்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்திய இளைஞர்களும், மாணவர்களுமே இலக்காகியுள்ளனர்.

÷ஆஸ்திரேலிய அரசு முதலில் இத்தகைய செயல்கள் நடைபெறவே இல்லை என்று மறுத்து வந்தது; தொடர்ந்து தாக்குதல் நடக்கவே இவை தனிப்பட்ட தாக்குதலே தவிர, இனவெறியால் நடந்ததில்லை என்று புதிய விளக்கம் அளித்தது. இதற்குப் பிறகு இப்படிப்பட்ட செயல்கள் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்று கூறியது.

÷லண்டனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித்தை இரண்டு முறை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தியர்கள் மீதான தாக்குதல் பற்றி ஆராய உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அப்போது கிருஷ்ணாவிடம் ஸ்மித் உறுதியளித்துள்ளார். அவ்வாறே குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் சுஜாதா சிங்குடன் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை செய்துள்ளார். இந்த ஆலோசனையின்போது வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராயும் உடன் இருந்துள்ளார்.

÷இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், ஏற்கெனவே தாக்குதல் நடத்தியவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரவும் அந்நாட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் இந்தியத் தூதர் விவரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நாலரை லட்சம் இந்தியர்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி விட்டனர். இன்னும் பலர் நாடு திரும்பத் தயாராக உள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

÷இவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் இருநாட்டு அரசுகளும் நடந்து கொள்வது இந்திய மக்களின் தன்மானத்தை விலை பேசுவதுபோல இருக்கிறது. நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, "ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் படிக்கச் செல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியா சென்று படிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறுநாடுகளில் உள்ள பட்டப்படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்' என்று அறிவுரை கூறியுள்ளார்.

÷இப்படி கூறுவதற்கு ஒரு மத்திய அரசும், அதற்கொரு வெளியுறவுத் துறையும் தேவையா, என்ன? இது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல இருக்கிறது. அடிபட்டவன் புகார் அளித்தால், "இனிமேல் அடிக்கிறவனிடம் போக வேண்டாம்' என்று காவல்துறை கூறுவதுபோல இல்லையா?

ஆஸ்திரேலிய அரசு இன்னும் ஒருபடி மேலே போய்விட்டது. அந்நாட்டு விக்டோரியன் மாகாணத் தலைமை காவல்துறை அதிகாரி, மெல்போர்ன் நகரில் சர்வதேச மாணவர்கள் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு "அரிய' ஆலோசனை வழங்கியுள்ளார். எப்படி தெரியுமா? ""ஏழைபோல் நடியுங்கள்; பணக்காரர்களைப்போல காட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி நடந்து கொண்டாலே உங்கள் மீது யாரும் கைவைக்க மாட்டார்கள்...'' என்பதுதான் அந்த யோசனை.

÷இந்த யோசனையை விக்டோரியன் பிரதமர் ஜான் பிரம்பி வரவேற்றுள்ளார். "இப்படி யோசனை கூறப்படுவதால் வெளிநாட்டு மாணவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று நினைக்கக் கூடாது. இனவெறித் தாக்குதலில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்' என்றும் அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

÷இப்படி இருநாட்டு அரசுகளும் "கண்ணாமூச்சி' ஆடுவதற்குக் காரணம் என்ன? இவர்களுடைய இயலாமை என்று கூறலாமா? அந்தந்த நாட்டு மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்; வாக்கு வங்கியை இழந்துவிடக் கூடாது. அதாவது, "பாம்பையும் அடிக்க வேண்டும்; கொம்புக்கும் நோகக் கூடாது'. எப்படியும் கொம்புக்கு நோகாது அல்லவா!

÷அண்மைக்காலங்களில் ஆஸ்திரேலிய கல்வித்துறை வரலாறு காணாத அளவில் அயல்நாட்டு மாணவர்களை ஈர்த்து வருகிறது. கல்வித்துறை மூலம் ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி வருவாய் அந்நாட்டு அரசுக்குக் கிடைக்கிறது. அந்நாட்டு அரசில் அதிக வருவாய் ஈட்டும் துறைகளில் மூன்றாவது இடத்தைக் கல்வித்துறை பெற்றுள்ளது.

÷ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் 19 விழுக்காடு இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மட்டும் 1,17,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

÷இந்நிலையில் இனவெறித் தாக்குதலால் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது 21 விழுக்காடு குறையும் எனவும், இதனால் அந்நாட்டு அரசுக்கு ரூ. 350 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் ஆஸ்திரேலிய சுற்றுலா கணிப்புக் குழுவின் தலைவர் பெர்னார்ட் சால்ட் கூறியுள்ளார்.

÷இந்தியா எவ்வளவு மழுப்பினாலும், கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆதிக்கம் செய்ததுபோல ஆஸ்திரேலியாவிலும் இனவெறி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்நாட்டின் கடந்தகால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும். இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும்போது இதற்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.

÷இதுபோலவே இனவெறி கொண்ட இலங்கை அரசு முன்னின்று நடத்திய தமிழினப் படுகொலையை இந்திய அரசு ஆதரித்தது; ஆயுதமும், ஆலோசனையும் வழங்கி உதவி செய்தது. ஐ.நா.வும், ஐரோப்பிய நாடுகளும், உலக மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசை எதிர்த்தபோதும் இந்தியா ஆதரித்து நின்றது. அப்போதே காந்தியம் இரண்டாம் முறையாகப் படுகொலை செய்யப்பட்டது.

÷1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின்படியும் இப்பிரச்னையில் தலையிடும் கடமை ஐ.நா.வுக்கு இருக்கிறது. எனினும் ஏதோ ஒரு நிர்பந்தத்தினால் அது தன் கடமையைச் செய்யத் தவறிவிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஆதரித்து ஒப்பமிட்ட இந்தியாவும், இலங்கையும் அதற்கு எதிராகவே செயல்படுகிறது.

÷ஆஸ்திரேலியாவில் இனவெறியால் தாக்கப்படும்போது இந்தியர்களுக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு, அன்று தமிழினம் அழிக்கப்படும்போது, இலங்கையை ஆதரித்து நின்றது எந்த வகையில் நியாயம்? இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களின் தொப்புள்கொடி உறவுதானே ஈழத்திலும்.

÷வெறி யாருக்கு வந்தாலும் நல்லதல்ல; அவர்களையும், அடுத்து இருப்பவர்களையும் ஆட்டிப் படைக்கும்; அழிக்கும். அது மொழி வெறியாக இருந்தாலும், நிறவெறியாக இருந்தாலும், இனவெறியாக இருந்தாலும் அப்படியே! இது தனிமனிதராக இல்லாமல் கூட்டமாக இருந்தால் கேட்க வேண்டுமா?

பொதுவாக, பற்றுக்கும், வெறிக்கும் நூலளவு வேறுபாடுதான். இங்கே பற்றுக்கும், வெறிக்கும் வேறுபாடு தெரியாமல் பேசப்படுகிறது. மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும், இனப்பற்றும் எல்லோருக்கும் தேவையானது என்பதே மானிடவியலாளரின் கருத்தாகும்.

தமக்கென வரும்போது பற்றாகவும், அடுத்தவர்க்கு வரும்போது வெறியாகவும் பரப்புரை செய்யப்படுகிறது. மும்பை இந்தியர்களுக்குச் சொந்தம் என்பதும், மும்பை மராத்தியர்களுக்குச் சொந்தம் என்பதும் இப்படித்தான்.

இன்று உலக வரலாறு என்பதே வெற்றி பெற்றவர்களின் வரலாறாக இருக்கிறது; எப்படியும் வெற்றி பெற்றுவிட்டால் அவன் செய்த தவறுகளும் நியாயமாகிவிடும். இன்று இனவெறியனாகச் சுட்டப்படும் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றிருந்தால் இன்று உலகம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும். வேறு வழி?

இனப்படுகொலை புரிந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச எப்படியோ வெற்றி பெற்றுவிட்டார்; அவர் செய்த அரச பயங்கரவாதம் அவரைத் தியாகியாக்கிவிட்டது. அவருடன் இணைந்து செயல்பட்ட முன்னாள் படைத்தலைவர் சரத் பொன்சேகா தோல்வியடைந்ததால் துரோகியாகிவிட்டார்.

பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகனான வால்டேரை, "தேசப் பற்றற்ற நாடோடி' என்று தூற்றியபோது அவர் கூறினார்: ""தேசப்பற்று என்பது மற்றொரு தேசத்தை வெறுக்கும் குறுகிய மனப்பான்மையல்ல. நான் முதலில் மனிதன்; உலகத்தின் குடிமகன்; பிறகே பிரெஞ்சுக்காரன்...'' என்று ஒரே உலகக் கொள்கைக்கு அன்றே அடித்தளமிட்டார் வால்டேர்.

ஆனால் அது பிரெஞ்சுப் புரட்சியோடு போய்விட்டது. இப்போது இனவெறிக் கொள்கை ஆஸ்திரேலியாவையும், இலங்கையையும் பிடித்து ஆட்டுகிறது. "இது இன வெறியா? இனப்பற்றா?' என்று பட்டிமன்றம் நடத்தப்படுவதுதான் பரிதாபம்.