
அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும், "பத்ம' விருதுகளை பெற, தகுதி இல்லாதவர்களும் முயற்சிக்கின்றனர். இதனால், அந்த விருதுகளின் புகழ் மங்கத் தொடங்கி உள்ளது. தானே திவாலானதாக ஒப்புக் கொண்ட தொழிலதிபர் சந்த் சிங் சத்வால் என்பவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது, இதற்கான சிறந்த உதாரணம்.
ஆனால், இவ்விருதை பெற தகுதியுடையவர்களாக இருந்தும், அவற்றை மறுத்தவர்களும் உள்ளனர். பிரபல எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி மற்றும் புகழ்பெற்ற கதாசிரியர் பாதல் சிர்கார் ஆகியோர் இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள். கடந்த 1971ம் ஆண்டு, சொந்த காரணங்களுக்காக, தனக்கு வழங்கப்பட இருந்த பத்மஸ்ரீ விருதை மறுத்தவர் பாதல் சிர்கார். அதே போன்று, உள்துறை அமைச்சகம் இரண்டு முறை தொடர்பு கொண்டு, பத்மபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தும், அதை மறுத்தவர் கிருஷ்ணா சோப்தி. தற்போது பாகிஸ்தானாக அமைந்துள்ள குஜராத்தில் பிறந்தவர் கிருஷ்ணா சோப்தி(85). இவர், இந்தி மொழி கட்டுரையாளராகவும், எழுத்தாளராகவும் தன் முத்திரையை பதித்தவர். 1966ம் ஆண்டு வெளியான இவரது, "மித்ரோ மாராஜனி' என்ற நாவல் மிகவும் பிரபலம். வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்படும், "கதா சூடாமணி விருது' 1999ம் ஆண்டு முதன் முதலில் இவருக்கு தான் வழங்கப்பட்டது. இதைத் தவிர, 1982ம் ஆண்டு, "சிரோமணி' விருது மற்றும் 2008ம் ஆண்டு, "ஷாலகா விருது' ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணா சோப்தி எழுதிய, "சிந்தாகிநாமா' என்ற நாவலுக்காக, அகடமி விருதுகளில் உயர்ந்த, "சாகித்ய அகடமி' விருது வழங்கப்பட்டது. இவரது பல படைப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் கிடைக்கிறது. ஒரு கருப்பொருளின் உண்மை, ஆழத்தை உணர வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் அவரின் நேர்மை, அவரது படைப்புகளில் பிரதிபலிக்கும். கிருஷ்ணா சோப்தியின் எழுத்து, பிரிவினை, புரட்சி, சமுதாய கொந்தளிப்பு, ஆண் - பெண் உறவு முறைகள் மற்றும் மனித மதிப்புகள் மாசுபாடு ஆகியவற்றை சுற்றியே அமையும். மண்டல மொழிகள் மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளர்கள் இடையேயான வேறுபாடு குறித்து கிருஷ்ணா சோப்தி கூறுகையில், "மண்டல மொழி எழுத்தாளர்கள், இன்று தேசத்தை மிகவும் இயல்பாக மற்றும் துல்லியமாக பார்க்கின்றனர். ஆங்கில மொழி எழுத்தாளர்களை விட மண்டல மொழி எழுத்தாளர்கள் தற்போது ஜனநாயகத்திற்கு மிகவும் நெருங்கியவர்களாக உள்ளனர். அதற்காக ஆங்கிலத்தில் எழுதுவது சரியில்லை என்று கூறவில்லை. அவையும் நன்றாக உள்ளன' என்றார்.