இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அன்னிய சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். கள்ளநோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விட பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு முயன்று வருவது உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கள்ளநோட்டுகளால் பொருளாதாரம் சீர்குலையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், இந்தியப் பொருளாதாரத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளது. இந்த ஆபத்து எவர் கண்ணுக்கும் தெரியாமல் பூதாகரமாக வளர்ந்தும் வருகிறது.
அன்னிய முதலீடு என்பதுதான் அந்த வளர்ந்து வரும் ஆபத்து. அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் இதுவரை செய்துள்ள முதலீட்டின் அளவு சுமார் 85 பில்லியன் டாலர்கள் (ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி) அந்த முதலீட்டின் சந்தை மதிப்பு சுமார் 154 பில்லியன் டாலர்கள் ( ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் கோடி).
இந்திய ரிசர்வ் வங்கி கடைசியாக அளித்த தகவலின்படி இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 285 பில்லியன் டாலர்கள் ( ரூ. 14 லட்சத்து 25 ஆயிரம் கோடி). இந்தக் கையிருப்பில் அன்னியப் பங்கு முதலீடுகள் மட்டுமல்லாமல் ஏற்றுமதி வருவாய், அன்னிய நாடுகளிடம் கடனாகப் பெற்ற தொகை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நமது நாட்டுக்கு அனுப்பிய பணம் அனைத்தும் அடங்கும்.மிக எளிதில் வெளியேறக்கூடிய பங்கு முதலீட்டுப் பணம் மொத்த அன்னியச் செலாவணிக் கையிருப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இருப்பது பொருளாதார ரீதியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவை விட்டுத் திடீரென வெளியேற முற்பட்டால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை இது ஏற்படுத்தும். இல்லை என்றால் அவர்கள் உடனடியாக வெளியேறாமல் தடுப்பதற்காக அரசாங்கம் அவர்களுக்குத் தேவையற்ற (நீண்ட கால முதலீட்டு வரி விலக்கு) சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் முதலீடு செய்துள்ள நாடுகள் நம்மைச் சுரண்டவே வழிவகுக்கும்.இதுதவிர இந்தியாவில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்தான் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நம்நாட்டில் வைத்திருப்பார்கள்.
இந்தியப் பொருளாதாரத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும் அறிகுறி தென்பட்டாலும் உடனடியாகத் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். அதனை நாம் எவ்விதத்திலும் தடுக்க முடியாது.அன்னிய முதலீடு இந்தியாவுக்கு வருவதில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்கள் இதனை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்தியப் பொருளாதாரம் சிறிது தொய்வடைந்த கடந்த ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட அன்னிய முதலீடு கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.அன்னிய முதலீட்டைக் கவரவேண்டும் என்ற எண்ணத்தில் முதலீட்டுக்கு இந்தியா பாதுகாப்பான நாடு; உங்கள் முதலீட்டுக்கு சட்ட ரீதியாகவும் பாதுகாப்பு உண்டு என்ற வாக்குறுதிகளை அள்ளிவீசும் அமைச்சர்கள், அந்த முதலீடுகளால் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளைச் சிந்திக்க மறந்துவிட்டனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் என்பதற்கு அன்னிய முதலீடுகள் மிகச் சிறந்த உதாரணம்.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மாறி தற்போதுதான் தொழில்துறை சிறிது முன்னேற்றமடைந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற வெளிநாட்டு முதலீடுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டு வரம்பை சமீபத்தில் ரூ. 600 கோடியிலிருந்து ரூ. 1,200 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அன்னிய முதலீடு நாட்டுக்கு நலன் தரும் என்ற எண்ணத்தில் வரம்பை உயர்த்திக் கொண்டே செல்வது, தெரிந்தே புதைகுழியில் விழுவதற்குச் சமம். உள்நாட்டில் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். குறிப்பாக ஊழல் மலிந்த அரசு, உள்கட்டமைப்புக் குறைபாடுகள், வருமான ஏற்றத்தாழ்வு, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவையே இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளாக உள்ளன. இந்தத் தடைகளை அகற்றினாலே இந்தியா நிச்சயமாக வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும்.
இது தவிர தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இளைய சமுதாயமும் உள்ளது. எனவே அன்னிய முதலீடுகளை மட்டுமே நம்பி ஆபத்தில் சிக்காமல், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் மாற்றுப் பாதைகளிலும் கவனம் செலுத்தினால் ஏற்றம் நிச்சயம்.
-