Wednesday, March 10, 2010

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்

புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தலாம் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.


கவுன்சில் உறுப்பினர் கோவிந்தாராவ், டில்லியில் கூறியதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, பேரல் ஒன்றுக்கு 80 அமெரிக்க டாலரை விட உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டி வரும்.அப்படி இல்லையெனில், எண்ணெய் நிறுவனங்களுக்கு பலமடங்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பை அரசு ஏற்கும் பட்சத்தில், அதன் பாதிப்பு வரி செலுத்துவோரை பாதிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை நுகர்வோர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்; மாறாக வரி செலுத்துவோர் அல்ல.இவ்வாறு கோவிந்தாராவ் கூறினார்.

லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் அவற்றின் விலை உயரும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய கச்சா எண்ணெய் விலை சர்வதேச நிலவரப்படி 82 டாலர், நாம் வாங்கும் போது சராசரியாக, 80 டாலர் வரை விலை தரவேண்டியிருக்கும். தற்போது எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி., - எச்.பி.சி.எல்., மற்றும் பி.பி.சி.எல்., ஆகியவை தினமும் 190 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கின்றன.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4.97, டீசல் ரூ. 3.27 மண்ணெண்ணெய் ரூ.16.91 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.267.39 என இழப்பாகும் என்று பெட்ரோலியத் துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார்.இதே நிலை நீடித்தால் பெட்ரோலிய நிறுவனங்கள் வளர்ச்சித் திட்டத்திற்காக எதுவும் செலவழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.