Tuesday, March 9, 2010

கண்துடைப்பு மசோதா!

மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, கடும் அமளிக்கு இடையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக முன்வைக்கும் வாதங்களையும், மசோதா நிறைவேறாமல் இருப்பதற்காக அவர்கள் கையாண்ட முறையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா பிரச்னையில் அவர்களுடைய கருத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை.

அடிப்படையிலேயே அரைவேக்காட்டுத்தனமானதும், உண்மையில் மகளிர் நலத்திலோ, மக்களாட்சித் தத்துவத்துக்கு மகத்துவம் சேர்க்கும் விதத்திலோ அமையாததுமான இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது சாதகங்களைவிட அதிகமான பாதகங்களை உள்ளடக்கிய ஒன்று என்பதுதான் உண்மை. இதன் மூலம் பயனடையப் போவது பெண்கள் என்பதைவிட, பெண்களைப் பகடைக்காய்களாக வைத்து அரசியல் நடத்த இருக்கும் அரசியல்வாதிகள்தான்.

கடந்த 14 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் நான்கு மக்களவைத் தேர்தல்களைச் சந்தித்துவிட்ட இந்த மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரை, ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இது இருந்து வந்திருக்கிறது. அடிப்படையில் பல சிக்கல்களையும், குறைபாடுகளையும் உள்ளடக்கிய இந்த மசோதாவைப் பற்றிய முறையான விவாதமோ, மாறுதலோ இல்லாமல் அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக நிறைவேற்றுவதிலேயே முந்தைய ஐக்கிய முன்னணி, தேசிய ஜனநாயக முன்னணி அரசுகளும், இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் குறியாக இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை.

சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிகளின் உள் ஒதுக்கீடு பிரச்னை ஒருபுறம் இருக்கட்டும். சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மகளிர் மசோதாவில் உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்கிற அவர்களது வாதம் விதண்டாவாதம் என்றே நாம் வைத்துக் கொண்டாலும்கூட, இந்த இட ஒதுக்கீடு மசோதாவால் ஏற்பட இருக்கும் வேறு பல குறைபாடுகளை யார், எப்போது, எப்படிக் களைவது என்கிற கேள்விக்குப் பதிலில்லை. மசோதா நிறைவேற்றப்படட்டும், மாற்றங்களைப் பிறகு செய்து கொள்ளலாம் என்பது பொறுப்பற்றதனமாகத் தெரிகிறது.

அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் உள்ள கோளாறு, அதை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. இந்த மசோதாவில் இன்றைய வடிவத்தின்படி, மொத்தமுள்ள மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதியாகத் தேர்தலுக்குத் தேர்தல் ஒதுக்கப்பட இருக்கின்றன. இதுவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானதாக அமையும் தன்மையது.

உதாரணமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்திலுள்ள சிந்த்வாரா என்கிற தொகுதியிலிருந்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா மேற்கு வங்காளத்திலுள்ள பங்குரா என்கிற தொகுதியிலிருந்தும் கடந்த 1980-ம் ஆண்டு நடந்த ஏழாவது மக்களவைத் தேர்தல் முதல் எட்டு முறை தொடர்ந்து வெற்றி பெறுபவர்கள். தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் இதுபோன்ற பல உறுப்பினர்கள், தங்களது தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதால், அந்தத் தொகுதியில் தேர்தலில் நிற்க முடியாமலும், அந்தத் தொகுதி மக்கள் தாங்கள் தொடர்ந்து ஆதரித்துவரும், தங்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க முடியாமலும் தடுக்கப்படுமே, இது எப்படி மக்களாட்சித் தத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்?

சட்டம் வந்தால் மட்டும்தான் பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற வாதத்தில் அர்த்தமில்லை. உண்மைதான் பேச வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டுமா என்ன?

மேலெழுந்தவாரியாக வாக்கு வங்கியைக் குறிவைத்து நாங்கள் பெண்களுக்குப் பெரிதாகச் செய்து விட்டோம் என்று சொல்லிக் கொள்ள காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகள் நடத்தும் கண்துடைப்பு நாடகமாகத்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தெரிகிறது. இந்தக் கட்சிகளுக்கு உண்மையிலேயே மகளிருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் அதிகப் பங்களிப்பு இருக்க வேண்டும் என்கிற அக்கறை இருந்தால், முதலில் தங்களது கட்சி அமைப்புகளிலும், செயற்குழு, பொதுக் குழுக்களிலும், அமைச்சரவைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்குவதுதானே. அதற்கு எந்தவிதச் சட்டமும் தேவையில்லையே.

அது போகட்டும். இந்த அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிருக்கு ஒதுக்குகின்றனவா என்றால் இல்லை. அப்படியிருந்தும் திறமையும் தகுதியும் வாய்ந்த மகளிர் கட்சித் தலைவியராகவும், முக்கியப் பொறுப்புகளிலும், அமைச்சர்களாகவும் இல்லாமலா போனார்கள்? சோனியா காந்தி, ஜெயலலிதா, மமதா பானர்ஜி, மாயாவதி, சுஷ்மா ஸ்வராஜ் என்று இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் பெண்கள்தானே, யார் அவர்களது வளர்ச்சிக்குத் தடை போட முடிந்தது?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவதால் மட்டும் பல திறமையான மகளிர் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அரைவேக்காட்டுத்தனமான இந்த மசோதாவால் ஏற்பட இருக்கும் பாதகங்கள்தான் சாதகங்களைவிட அதிகமாக இருக்கப் போகிறது. அப்படியானால் அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கு அதிகப் பங்களிப்பு ஏற்பட என்னதான் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது.

முதலில், அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதைக் கைவிட்டு, அரசியல் கட்சிகளின் சட்டத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது எல்லா அமைப்புகளிலும், பூத் கமிட்டியிலிருந்து செயற்குழு வரை, மகளிருக்கு சரிபாதி பங்களிப்பை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலிருந்து மக்களவைத் தேர்தல்வரை எல்லா தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலிலும் சரிபாதி இடங்களில் மகளிர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும்.

அப்படிச் செய்யும்போது, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, எல்லாத் தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதுடன் மிக அதிக அளவில் ஆட்சி அதிகாரத்தில் மகளிரின் பங்களிப்பு உறுதி செய்யப்படும். அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை உணர்வு தடம் புரளும் என்பதுடன், அதிக அளவில் அரசியல்வாதிகளின் "பினாமி'க்கள் தேர்ந்தெடுக்கப்படும் அபாயம்தான் ஏற்படும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு மசோதா. அதனால் இது நிறைவேறாமல் போனால் நல்லது... மகளிருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்!