-
Wednesday, March 10, 2010
இனி பருப்பு வேகுமா? "இனி எங்கள் முதல் வேலை "
கடந்த சில தினங்களாக எந்த இந்திய நாளிதழ்களைப் புரட்டினாலும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற உணவுப் பொருள்களின் விலை ஏற்றம் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாகப் பருப்பு விலை ஏற்றம் பயங்கரமாயுள்ளது. கிலோ ரூ. 80 கொடுத்து வாங்கிய பருப்பு வேகவும் இல்லை. கிலோ ரூ. 100 விலையுள்ள பருப்பு வேகலாம். வேகாத அன்னியப் பருப்புகளுக்கு அநியாய விலை வழங்க வேண்டியுள்ளது. உயர்ந்து செல்லும் உணவு விலைகள் நடுத்தர மக்களை வாட்டி எடுப்பதால் இப்போது அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ""உன்னால்தான்'' ""உன்னால்தான்'' என்று ஒருபக்கம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதுடன் கூடவே, ""இனி எங்கள் முதல் வேலை ""உணவு விலைகளைக் கட்டுப்படுத்துவதுதான்'' என்று சூளுரை வேறு... இன்றா, நேற்றா. உணவு விலை ஏற்றம் கடந்த ஆண்டே நிகழ்ந்துவிட்டது. எதுவோ நேற்றுதான் விலை உயர்ந்ததுபோல் இவர்கள் பேசுகிறார்கள்.விலைவாசியைக் கட்டுப்படுத்த பட்ஜெட்டில் பணம் ஒதுக்குவதாகவும் பேச்சுள்ளது. பருப்பு ஏற்றுமதி செய்யும் பல நாடுகளில் இந்தியக் கதை உள்ளது. தவிரவும், ஏற்றுமதி செய்தவர்களுக்குப் பழைய பாக்கி இன்னம் தரவில்லையாமே. உணவுப் பற்றாக்குறை உலகளாவியதாயுள்ளது. ஏற்றுமதி நாடுகளிலும் பருப்புக்குப் பற்றாக்குறை. சும்மா பருப்பு வெந்துவிடாது. எப்போது பருப்பு வரும்?கைக்குழந்தைக்கு சாதம்போட்டுப் பருப்புப்போட்டு நெய்போட்டு மணக்க மணக்கப் பிசைந்து ஊட்ட முடியாத தாய்மார்களின் கவலை விவசாய அமைச்சருக்கு எட்டுமா? எட்டவே எட்டாது. ஏனெனில் பருப்பைக் காணோம், அரிசியைக் காணோம் என்றால் மதிப்புக்குரிய விவசாய அமைச்சர் வீரபாண்டியாரும், கிரிக்கெட் அமைச்சரும் மத்திய விவசாய அமைச்சருமான சரத்பவாரும் பி.ட்டி கத்தரிக்காய்களை மான்சண்டோ - மஹைக்கோ நிறுவனங்களிடமிருந்து வாங்கி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். அமைச்சர்களின் கவலை வளரும் குழந்தைகளுக்குப் பருப்பு சாதம் வழங்குவதாக இல்லை. மாறாக யு.எஸ். நிதி உதவி உயிரித் தொழில்நுட்பம் பாக்கேஜ்-2லிருந்து துரோகி விஞ்ஞானிகளுக்கு வரும் பாக்கேஜுகளைக் கூறுபோட்டால் எவ்வளவு தேறும் என்பதில் ஆர்வம் உள்ளது. பருப்பு ஒரு கேடா? பி.ட்டி. வெண்டைக்காய், பி.ட்டி முட்டைக்கோஸ், பி.ட்டி மக்காச்சோளம் என்று எவ்வளவு அயிட்டங்கள் உள்ளன. பருப்பு நிலமெல்லாம் பி.ட்டி பருத்தி நிலமானது. இன்று பருப்பு அபேஸ். பி.ட்டி மக்காச்சோளம் பி.ட்டி வெண்டை வந்து இனி கோதுமை நிலம் அபேஸôகும்.உலகிலேயே புரத உணவைப் பருப்பு வடிவில் சைவமாக உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டுமே உண்டு. இதர நாடுகளில் இறைச்சி உணவு. ஆகவே, இந்தியாவில்தான் பருப்பு உற்பத்தியும் அதிகம். பருப்பு நுகர்வும் அதிகம். பருப்பு இறக்குமதியும் அதிகம். ஆகவே இந்திய விலையை வைத்துத்தான் ஏற்றுமதி நாடுகளின் விலைகளும் ஏறுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாகப் பருப்பு உற்பத்தியும் பருத்தி சாகுபடியும் படிப்படியாகக் குறைந்துவிட்டது. படிப்படியாகப் பருப்பு இறக்குமதி உயர்ந்துவிட்டது. இன்று அனைத்துலகச் சந்தையில் இவ்வளவு விலை உயர்ந்தாலும் இந்தியாவிலும் பருப்பு விலை ஆகாசத்தைத் தொட்டாலும்கூட விவசாயிகள் பருப்பு சாகுபடி செய்ய முன்வருவது இல்லை. ஏனெனில் இந்தியாவில் பருப்பு சாகுபடி செய்வதா பி.ட்டி பருப்பு உற்பத்தி செய்வதா என்பதை அமெரிக்கத் தொழில்நுட்ப உதவித்திட்டம் நிர்ணயிக்கிறது. ஆகவே, இந்திய மாநில அரசுகள் பருப்பு உற்பத்தியாளர்களுக்கு எந்தச் சிறப்பு உதவியோ, கொள்முதலோ, ஊக்கவிலைகளோ வழங்க முன்வருவது இல்லை. நாளைய வரலாறில் இந்தியாவில் பருப்பு சாகுபடி இருந்ததா என்ற சந்தேகம் வந்துவிடக் கூடாது என்று கருதி, நாம் சில விவரங்களைப் பதிவு செய்து கொள்வது நல்லது.1985-86-ம் ஆண்டு வரை இந்தியாவில் சராசரியாக 2.3 கோடி ஹெக்டேரில் பருப்பு விளைவிக்கப்பட்டு, உற்பத்தி 1.3 கோடி டன்கள் விளைந்த நிலை குறைந்து இன்று 1.90 கோடி ஹெக்டேரில் பருப்பு சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி 90 லட்சம் டன்களாகக் குறைந்துவிட்டது. பருப்பு அதிகபட்சம் மானாவாரியாகவும், கலப்புப்பயிர்களில் ஒன்றாகவும் பயிராகிறது. 1994-ல் 5 லட்சம் டன்கள் பருப்பு இறக்குமதி படிப்படியாக உயர்ந்து இன்று 2009 வரை பருப்பு இறக்குமதி ஆண்டுக்கு 30 லட்சம் டன்களாக உயர்ந்துவிட்டது. இதில் சோகம் எதுவெனில் நாட்டில் பருப்பு உற்பத்தியை உயர்த்த பருப்பு சாகுபடிக்கு இலவச சொட்டு நீர்ப்பாசனம்-தெளிப்புப் பாசன வசதிக்கு முயற்சி என்று உருப்படியாக நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு பருப்பு இறக்குமதி செய்யலாம் என்பதற்கு எக்ஸ்பர்ட் கமிட்டி செயல்படுகிறது. இந்தியாவின் பருப்புக்கொள்கை கற்பனைக்கு எட்டாத மடமையில் செயல்படுவது நிரூபணம்.இந்தியாவில் எவ்வளவு பருப்புகள் வகைவகையாக உள்ளன? மொத்த உற்பத்தியில் 40 சதம் பங்கு கொண்டைக்கடலை வழங்குகிறது. ஏறத்தாழ 40 லட்சம் டன்கள் கொண்டைக்கடலைகளை சுண்டல் வடிவமாக உண்பது உடம்புக்கு ஆரோக்கியம். ஆனால் கடலை மாவாக மாற்றப்பட்டு பஜ்ஜி, பகோடா, மைசூர்பாகு என்று உண்பதும் நொறுக்குத் தீனியாக மிக்சர், ஓமப்பொடி, முறுக்கு என்று கொரிப்பதும் விரும்பத்தக்கதல்ல. குறிப்பாக உடல் பருமனாக உள்ளவர்கள் தவிர்க்கலாம். கொண்டைக்கடலையில் கரிய பழுப்பு, சந்நியாசி, வெளிர்மஞ்சள், கருப்பு, குலாபி எல்லாம் சிறப்பானவை. இந்தியாவில் விளையக்கூடிய கொண்டைக்கடலை வேறு நாடுகளில் கிடையாது. இறக்குமதியாவது வெள்ளைக்கடலை மட்டுமே. இதற்கு காபூலிசெனா என்றும் பெயர். இது ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. வெள்ளைக்கடலையில் உப்புக்கடலையோ பொட்டுக்கடலையோ தயாரிக்க முடியாது.இரண்டாவதாக, துவரை, மொத்தப்பருப்பு உற்பத்தியில் இதன் பங்கு 20 சதம். அதாவது ஏறத்தாழ 20 லட்சம் டன்கள். நமது பற்றாக்குறையை மியான்மர் மட்டுமே இட்டு நிரப்புகிறது. நைஜீரியாவிலிருந்தும் வருகிறது. உள்ளூரில் நாம் விளைவிக்கும் பருப்பைவிட இறக்குமதிப் பரப்பு தரமானது இல்லை. துவரையின் தோலி நிறத்தை வைத்து வெள்ளை, சிவப்பு, கருப்பு, பழுப்பு, மொசைக் என்று ஆறு ரகங்களை வேற்றுமைப்படுத்தலாம். இவற்றில் வெள்ளை நிறமும், மொசைக் நிறத் துவரையும் தரம் மிகுந்தவை. பெரிதாகவும், நன்கு வேகக்கூடியதாகவும் இருக்கும். சிவப்பும் அவ்வாறே. துவரையின் பெயரே ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் சிவப்புப் பருப்பு. அர்ஹர் என்றாலும் சிவப்பு. மொசைக் என்பது மரத்துவரை. இது கொங்கு நாட்டின் சிறப்பு ரகம். பெரன்னியல் 10 ஆண்டுகள் பலன் தரும். பல்லுயிர் வேளாண்மைக்கு ஏற்ற ரகம். நிறம் ஊதாவில் பழுப்புத்திட்டுகள் பதித்து டிசைனாக இருக்கும். இதே கொங்கு நாட்டில்தான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்ளது. இப்படிப்பட்ட அரிய துவரை ரகத்தை விரிவாக்கம் செய்யாமல் அமெரிக்க ஆலோசனையையும், மான்சென்டோ ஆலோசனையையும் கேட்டு பி.ட்டி, பி.ட்டி என்று புலம்பும் கொடுமையை என்னென்பது!உளுந்து மூன்றாவது முக்கிய பருப்பு வகை. மொத்தப் பருப்பு உற்பத்தியில் உளுந்து 4 சதம் மட்டுமே. மொத்த உளுந்து உற்பத்தி சராசரியாக 12 லட்சம் டன் முதல் 15 லட்சம் டன்கள். இதில் சாம்பல், கருப்பு, கரும்பச்சை, பெருவெட்டு, சிறுசு என்ற ரக வேற்றுமைகள் உள்ளன. இவைதவிர, ஏராளமான ரகங்களை ஒருகாலத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பாசிப்பயறு அல்லது பச்சைப்பருப்பு நான்காவது இடத்தில் உள்ளது. இது சுமார் 10 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. மொத்த உற்பத்தியில் இதன் பங்கு 4 சதம்.உளுந்தும் பயறும் இந்தியச் சிறப்புகள். சீனாவிலும் உண்டு. ஏற்றுமதி செய்யும் அளவில் எந்த நாட்டிலும் சரக்குகள் இல்லை.இந்த நான்கு முக்கிய பருப்புகளைத் தவிர தட்டாம்பயறு என்ற காராமணி தென்மாநிலங்களில் மட்டுமே விளைகின்றன. மலைப்பிரதேசங்களில் "ராஜ்மா' என்ற காராமணி விலைமதிப்புள்ள பருப்புகளில் ஒன்று. நம்ம ஊர்ச் சிவப்புக் காராமணியின் பெரிய உருவமே ""ராஜ்மா''. இவற்றைத்தவிர, மசூர், நரிப்பயறு, பட்டாணி, கேசரிப்பருப்பு ஆகியவை குறைந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், உலகளாவிய நிலையில் அதிகம் விளைவது மசூர் பருப்பு. இதைத்தான் துவரம்பருப்பு என்று அரசு சத்துணவுக் கூடங்களுக்கு வழங்குகிறது. தொன்றுதொட்டே மசூர் துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த காரணத்தால் இதற்குத் துலுக்கப்பயறு என்று தமிழில் பெயருண்டு. ÷இந்தியாவிலும் துலுக்கப்பயறு சிறிது விளைகிறது. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். ருசி பாசிப்பருப்பு போல் இருக்கும். நன்கு வெந்துவிடும். வடக்கில் பூண்டு, தக்காளிப்பழம் சேர்த்து செய்யப்படும் தால் ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். பட்டாணிப்பருப்பு மஞ்சள், பச்சை என்று இரண்டு ரகங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறது. கெட்ட கேட்டுக்குக் கேசரிப்பருப்புகூட இன்று கிலோ ரூ. 50 என்று விற்கப்படுகிறது. உணவில் இது அதிகமானால் முடக்குவாதம் வரும் நச்சுப்பொருள் இயல்பாகவே உண்டு. அதேசமயம் பருப்பு வகைகளில் அதிகம் புரதச்சத்து உள்ள பருப்பும் கேசரிப்பருப்புதான். இது துவரம்பருப்பைப்போல் இருக்கும். துவரம்பருப்போடு கலப்படம் செய்து நம்ம ஊர் மளிகைக்கடைகளில் விற்கப்படுவது உண்டு. அளவுடன் உண்டால் பாதிப்பு இருக்காது. அதை மட்டுமே உண்டால் முடங்க வேண்டியதுதான். இவ்வாறு நாம் இந்தியாவில் விளையக்கூடிய பல்வகைப் பருப்புகளின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் வாழ்கிறோம். இவ்வளவு சிறப்புள்ள பருப்பு ரகங்கள் இருந்தும்கூட இதன் உற்பத்தி உயரவில்லை. படிப்படியாகக் குறைகிறது. பிரியாணி வழங்கும் அரசியல் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை? இந்தியப் பருப்பு வகைகளுக்கு ஏராளமான மருத்துவக் குணமும் உண்டு.கடலைப்பருப்பு பித்தநீர் சுரப்பதைக் கட்டுப்படுத்தும். பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் வயிற்றுப்புண்ணை ஆற்றும். உளுந்து ஒப்பற்ற மருந்து. சோடாஉப்பு சேர்க்காமல் நல்ல எண்ணெயில் செய்யப்படும் அனுமார் வடை ஆரோக்கியமானது. வெந்தயத்தைப்போல் வயிற்றுப்புண்ணை ஆற்றும், பேதியையும் நிறுத்தும்.உலகிலேயே அதிகம் பருப்புகளை-வகைவகையாகச் சாகுபடி செய்யும் ஒரு பாரம்பர்யமே பாரத நாட்டின் சிறப்பு. இந்தச் சிறப்பு இனி எதிர்காலத்தில் இருக்குமா? அழியுமா? பொறுப்புள்ள அமைச்சர்கள், இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிப்பதில் ஆர்வமாயுள்ளனர். இந்த நிலை மாறி, புரதச்சத்து இல்லாத இந்தியர்களுக்குப் புரதம் வழங்கச் சட்டியில் விதம்விதமான பருப்புகளை விழச் செய்யும் ஒரு நன்னாள் வரவேண்டும். அன்றுதான் பருப்பு வெந்து உள்ளம் குளிரும்.