எல்லாத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைக்கும் காலம் இது. குடியரசுத் தலைவர், மக்களவைத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி, மாபெரும் கட்சித் தலைவர் என்று இன்று பெண்கள் புகுந்து புறப்படாத துறைகளே இல்லை எனலாம். கனவில் மட்டுமே சாத்தியப்பட்டு வந்த விண்வெளிப் பயணமும் மகளிருக்கு சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியப் பெண்கள், அயல்நாட்டு நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கிறார்கள். நிர்வாகத் துறையில் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். கேட்பதற்கும், பார்ப்பதற்கும், படிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் பெண்களின் நிலை உயர்ந்திருக்கிறதா? படித்த, நகர்ப்புறப் பெண்களே தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாகப் போராட வேண்டிய நிலையில், படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். வரதட்சிணைக் கொடுமை, வன்கொடுமை, பாலியல் ரீதியிலான தொல்லைகள் என்று பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்தியப் பெண்களில் 66.6 சதவீதம் பேர் குடும்ப வன்முறைக்கு இலக்காவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5,000 பெண்கள் வரதட்சிணை கொடுமையால் உயிரிழக்கிறார்கள். இதில் சராசரியாக 12 பேர் சமையலறையில் தீப்பிடித்து இறப்பதாக அதாவது ஸ்டவ் வெடித்து இறப்பதாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டுக்கான உலக குழந்தைகள் நிலை பற்றிய அறிக்கைப்படி, 20 முதல் 24 வயதுள்ள திருமணமான இந்தியப் பெண்களில் 47 சதவீதத்தினர், சட்டப்படியான திருமண வயதான 18 வயது நிரம்புவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டவர்கள். இதில் 56 சதவீதத்தினர் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சர்வதேச அளவில் 40 சதவீதம் அளவுக்குக் குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடக்கின்றன (சேலத்தில் கடந்த வாரம் 13 வயது சிறுமி ஒருவருக்கு நடந்த திருமணமே இதற்கு உதாரணம்!). அதேபோல உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகம். கிராமப்புறங்களில் கல்வி கற்பவர்களில், பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு இந்திய கிராமங்களில் பெண்களுக்கென பிரத்தியேக கழிப்பறை இல்லாததும், பெண் ஆசிரியைகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, அடிப்படை விஷயங்களிலேயே பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையே, நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கிறது என்பது வருத்தத்துக்குரியது.
இந்நிலையில் படித்த பெண்கள், நகரத்தில் வசிக்கும் இளைஞிகள், நாகரிகம் என்ற பெயரில் கலாசாரச் சீரழிவுக்கு ஆளாகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக நிலவி வருகிறது. உயர் பதவி வகிக்கும் பெண்களில் ஒரு சிலர் லஞ்சலாவண்யங்களில் சிக்கி பெயர் கெட்டு, மதிப்பிழந்து போன நிலையையும் ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். அவையெல்லாம், வெள்ளாட்டு மந்தையில் ஒரு சில கருப்பாடுகள் என்று நமக்குநாமே சமாதானப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை.தேவைக்கு அதிகமான ஆடம்பரமும், முறையில்லாத வழியில் பெறும் பொருளும் எந்த நாளும் நிலைத்ததில்லை.
தாங்கள் கற்ற கல்வியால் பெறும் சம்பாத்தியத்தைத் தவிர, முறையற்ற வழியில் கிடைக்கும் எந்த ஒரு வசதியையும், பொருளையும், பணத்தையும் நாடுவதில்லை என படித்த பெண்கள், குறிப்பாக உயர் பதவியில் இருக்கும் பெண்கள் தமக்குள் உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும். லட்சக்கணக்கில் பணம் செலவழித்துப் படித்து, மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் பதவிக்கு வரும் பெண்கள், கேவலம் ஒரு சில ஆயிரங்களுக்காக லஞ்சலாவண்யப் புகார்களில் சிக்கி, மானம் கெட்டு, தலைகுனிவுக்கு உள்ளாகும் நிலை தேவையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆடம்பரத் தேவைகளைச் சுருக்கிக் கொண்டால், மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை இருக்காது. சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இளம் பெண்கள், அதில் வரும் மாடல்களைப் போல மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாகச் சுற்றுதல், கல்லூரி, பள்ளி வகுப்புகளைக் "கட்' அடித்துவிட்டு மனம் போன போக்கில் திரிதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே மலரும் இளமைப் பருவத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதற்கேற்ப, தம் வாழ்க்கையை சிறந்த முறையில், நல்ல முறையில் அமைத்துக் கொள்வது இளைய சமுதாயத்தினரின் கையில்தான் உள்ளது.
இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் அவ ர்களைத் தொடர்ந்து கண்காணித்து அறிவுரை கூறுவதும், அவர்கள் சரியான பாதையில் செல்ல வழிகாட்டுவதும் அவசியம். காலங்காலமாகத் தொடரும் பெண்களுக்கெதிரான வரதட்சிணை கொடுமைகளுக்கு இனியும் முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது, நம்மை நாமே குழி தோண்டிப் புதைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். வரதட்சிணை கேட்கும் வரனுக்கு வாழ்க்கைப்பட மாட்டேன் என்று உறுதியாக முடிவெடுக்கும் நிலைக்கு பெண்கள் உயர வேண்டும். "என் மகளுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்ய வேண்டிய நிலை வரும் என்றால், அவளுக்குத் திருமணமே தேவையில்லை' என்று கண்டிப்புடன் முடிவெடுக்கும் துணிவு ஒவ்வொரு பெற்றோருக்கும் வரவேண்டும்.
அப்படிப்பட்ட உறுதியான முடிவெடுக்காத வரையில், எத்தனை காலமானாலும் நம் நாட்டைவிட்டு வரதட்சிணைப் பேயை விரட்டவே முடியாது. படித்த பெண்கள், கிராமப்புற மகளிரின் கல்விக் கண் திறக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். "கற்றதனாலாய பயன்' மற்றவர்களின் நிலையை உயர்த்துவதே என்பதை மகளிர் உணர வேண்டும். நாடாளுமன்றத்தில் மகளிருக்கென 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றுவதுடன் பணி முடிந்துவிட்டதென அரசியல் கட்சிகள் கருதக்கூடாது. உண்மையில், சர்வதேச அளவில் நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினர்கள் 18 சதவீதத்தினரே. இதில் நம் நாட்டில் 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்தால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகத்தான் இருக்கும். கடைக்கோடி கிராமப் பெண்களுக்கும் ஆட்சியில் சம உரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கு நீண்ட நாள்கள் ஆகலாம். ஆனாலும் பொறுமையோடு காத்திருப்போம்.
-