Sunday, August 1, 2010

சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் அல்ட்ரா டீலக்சாக மாற்றம்


தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து டயர், டியூப் உள்ளிட்ட அனைத்து உதிரி பாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிகட்டும் வகையில், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் அனைத்தையும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய தொழில் நகரங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.பெங்களூரில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, நாகர்கோவில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தேனி, கம்பம் ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டு விட்டன. மேலும் 5 சதவீத பஸ்கள், "ஏசி' வசதி பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 18 சதவீதம்சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் 2 சதவீதம் மட்டுமே சாய்வு சீட் இல்லாத சாதாரண பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. அதன் காரணமாக, பஸ்களுக்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கான செலவு அதிகரித்ததோடு, கச்சா ஆயிலை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் அனைத்து உதிரி பாகங்களின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தலை மனதில் கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தப்போவது இல்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சரி செய்ய, மறைமுக யுக்திகளை கையாளத் துவங்கியுள்ளன.

முதற்கட்டமாக, விரைவு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இயக்கப்படும் சாய்வு சீட்டுகளைக் கொண்ட சூப்பர் டீலக்ஸ் பஸ்களை, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சீட்டு ஒன்றுக்கு குறைந்த பட்சம் 25 முதல் அதிகபட்சம் 75 ரூபாய் வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்க முடியும்.விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த முடிவின்படி சேலத்தில் இருந்து மதுரை வழியாக இயக்கப்படும் சேலம் - திருநெல்வேலி(628வி), சேலம் - திருச்செந்தூர்(637), சேலம் - ராமேஸ்வரம்(633), சேலம் - சென்னை (விழுப்புரம், தாம்பரம் வழி), சேலம் - சென்னை (திருவண்ணாமலை, திண்டிவனம் வழி), ஈரோடு - திருநெல்வேலி, கோவை- திருநெல்வேலி, திருப்பூர் - திருநெல்வேலி என இயக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள்என, தமிழகம் முழுவதும் 125 சூப்பர் டீலக்ஸ் பஸ்களை அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்ற போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.அதற்கான அறிவிப்புகளை வெளியிடாமல் சத்தமின்றி பஸ்களின் கட்டமைப்பில் சிறு மாற்றம் செய்து, டிக்கெட் கட்டணத்தை அதிகரிக்க விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்து, அமைச்சரின் ஒப்புதலையும் பெற்றுள்ளனர். விரைவில் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மட்டுமே இருக்கும்.

அமைச்சர் என்ன சொல்கிறார்?இது பற்றி போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு கூறுகையில், ""அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது இயக்கப்பட்டு வரும் பஸ்களை, "அல்ட்ரா டீலக்சாக' மாற்றுவது போன்ற திட்டம் ஏதுமில்லை. இந்த ஆட்சியில் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு இதுவரை 500 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் மேலும் 100 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.""இந்த பஸ்கள் சாதாரண கட்டண விகிதம் ஒரு கி.மீ.,க்கு 32 காசு என்ற அடிப்படையிலேயே இயக்கப்படுகின்றன. "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்சில் கி.மீ.,க்கு52 காசு வசூலிக்கப்படுகிறது. இவற்றில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாதென முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், பழைய கட்டணத்தில் தான் இயக்குகிறோம்,'' என்றார்