Wednesday, August 4, 2010

வருகிறது 'சோலார் சுனாமி'!


லண்டன்: சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.

'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

(போட்டானுடன் கூடவே வெளியேறும் இன்னொரு சூரிய துகள் நியூட்ரினோ. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)

சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். (super heated gases தான் பிளாஸ்மா).

இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.

இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.

இந் நிலையில் சூரியனின் வட பகுதியில் இன்னொரு மகா வெடிப்பு நடந்திருக்கிறது. சூரியனில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் அகலமே நமது பூமியின் அளவைவிட பெரியது என்கிறார்கள்.

பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் கடந்த ஜூலை 31ம் தேதி பதிவு செய்துள்ளன.

இதனால் கிளம்பிய கதிர்வீ்ச்சுக்களும் மின் காந்த அலைகளும் சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பரவியுள்ளன.

இதற்கு சோலார் சுனாமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நமது காற்று மண்டலத்தின் உபயத்தால் இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதி்ப்பு ஏதும் இருக்காது என்றாலும் சில செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே நேரத்தில் இன்று இரவு இந்த மின்காந்த கதி்ர்வீச்சுக்கள் பூமியை அடையும்போது அதன் துருவப் பகுதிகளில் (ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள்) Auroa Borealis எனப்படும் மாபெரும் பல நிற வெளிச்சம் உருவாகும். வானில் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நீளும் இந்த வெளிச்சம், பூமியை மின் காந்த அலைகள் தாக்குவதின் எதிரொலி தான்.