Monday, August 2, 2010

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குரூர முகபாவங்கள்


தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் களிப்பில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர். அத்திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தன்னுடைய களிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அவருடைய அளவில் இந்தக் களிப்பு நியாயமானது.

ஏனெனில், தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மாநில அரசுகளும் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதனால், பல மாநில அரசுகள் தமிழகத்தைப் பின்பற்றி இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தை தத்தமது மாநிலங்களில் அறிமுகப்படுத்தும் யோசனையில் இருக்கின்றன.

ஆனால், தமிழக முதல்வர் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான் நாட்டின் தலைநகரத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குரூர முகபாவங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 4 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 18 பெரிய நிறுவனங்கள் பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வகை செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை (கேஷ் லெஸ் மெடி க்ளைம்) சில முக்கிய நகரங்களிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் நாட்டின் பல நகரங்களுக்கு இந்த நடவடிக்கை நீளலாம்.

தம்முடைய இந்த நடவடிக்கைக்கு, மருத்துவமனைகள் சிகிச்சைக்கு அநியாயக் கட்டணம் வசூலிப்பதாகவும் தங்களுக்கு கட்டுப்படியாகாததாலேயே இம்முடிவுக்கு வந்திருப்பதாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் தன்னிலை விளக்கம் அளித்துள்ளன. இந்திய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் கடந்த ஆண்டு தம் வாடிக்கையாளர்களிடமிருந்து "பிரீமிய'மாக வசூலித்த தொகையைக் காட்டிலும் இரண்டில் ஒரு பங்கு கூடுதலாக மருத்துவமனைகளுக்குச் செலுத்த வேண்டியிருந்ததாகக் காப்பீட்டுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்னையை மேலோட்டமாக அணுகுவோர் "பாவம், காப்பீட்டு நிறுவனங்கள்' என்று சொல்லலாம் (அரசுத் தரப்பும் இந்தியக் காப்பீட்டுத் துறையும் இப்போது அப்படித்தான் சொல்கின்றன). ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்துவரும் வியாபார உத்திகளில் ஒன்றுதான் இந்த நடவடிக்கை.

தமிழகத்தில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படுகிறது? முதல்வர் அளித்திருக்கும் தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 1.53 லட்சம் நோயாளிகள் பயன் அடைந்திருக்கின்றனர்.

இதற்காக இந்தச் சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனைகளுக்கு அரசுடன் ஒப்பந்தமிட்டுள்ள காப்பீட்டு நிறுவனம் ரூ. 415.43 கோடி அளித்திருக்கிறது. ஆனால், இத்திட்டத்துக்காக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு அரசு முதல் ஆண்டில் செலுத்தியிருக்கும் "பிரீமியம்' ரூ. 628.20 கோடி. இந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்காக மேலும் ரூ. 750 கோடியை அரசு ஒதுக்கியிருக்கிறது.

இத்திட்டத்தால் உள்ளபடி யாருக்கு லாபம் என்பதை ஒரு பாமரனும் எளிமையாகச் சொல்லிவிடக்கூடும். ஆனால், மருத்துவக் காப்பீட்டு முறை ஏற்படுத்தும் மிகப் பெரிய இழப்பாக நாம் சுட்டிக்காட்டுவது லட்சக் கணக்கானோரின் உயிருடன் விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதேயாகும்.

ஜவுளிக் கடைகள் ஏதாவது ஒரு பெயரில் ஆண்டு முழுவதும் தள்ளுபடி அளிப்பதுபோல, எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவ நிபுணர், கடந்த ஓராண்டாக ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி "ஆலோசனைக் கட்டணம் முழுத் தள்ளுபடி' அளித்து நோயாளிகளைப் பார்க்கிறார்.

நோயாளிகளிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி: ""என்ன பிரச்னை?'' அடுத்த கேள்வி: ""காப்பீட்டு அட்டை இருக்கிறதல்லவா?'' ஒரு நோயாளியை அறுவைச் சிகிச்சைக்குத் தேர்ந்தெடுக்க இந்த இரு கேள்விகள் அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. இப்போது அவருடைய மருத்துவமனை ஒரு "நிரந்தர மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் தேர்வு முகாம்' ஆகிவிட்டது.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்டோரில் உண்மையிலேயே எத்தனை பேருக்கு அறுவைச் சிகிச்சை அத்தியாவசியமாகத் தேவைப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் மருத்துவக் காப்பீட்டு அட்டையை லாட்டரிச் சீட்டுபோல பார்க்கிறார்கள். ஒவ்வோர் அட்டையிலும் உள்ள தொகையை முதலில் உறிஞ்சப்போவது யார் என்று மருத்துவர்களிடையே ஒரு போட்டியே நடந்துகொண்டிருக்கிறது.

மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள கள்ள உறவு இந்த ஆபத்தான போட்டியை ஊக்குவிக்கிறது. அரசு தன் பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்வதற்காக இந்தப் போட்டியை அனுமதிக்கிறது.

தமிழகத்தின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான } காவிரிப் படுகை மாவட்ட மக்களின் மருத்துவ ஆதாரமான } தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற ஒரு மருத்துவமனையை அமைக்க இன்றைக்கெல்லாம் ரூ. 135 கோடி போதுமானதாக இருக்கிறது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நாளில் சராசரியாக வந்து செல்லும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 400; அங்கு தங்கியிருக்கும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 600. ஒவ்வொரு நாளும் அங்கு 15}20 பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கியிருக்கும் இந்த ரூ. 1,378 கோடியில் தமிழகத்தில் 10 இடங்களில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளை உருவாக்கி இருக்கலாம். நம்முடைய மருத்துவக் கட்டமைப்பை அவை எப்படி பலப்படுத்தியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!

இப்போதும்கூட மோசம் இல்லை. இன்னும் அரசின் கைகளில் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், நம்முடைய அரசு தஞ்சாவூர் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளை உருவாக்கப்போகிறதா? திருச்சி மருத்துவர் போன்ற மருத்துவர்களை ஊக்குவிக்கப்போகிறதா?