-
Sunday, August 1, 2010
தண்டவாளங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படுவது ஏன்?
பழைய தண்டவாளங்களை மாற்றாமல் அப்படியே ரயில்களை இயக்குவதால் பல இடங்களில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி பழைய தண்டவாளங்களை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் கடந்த 1853ம் ஆண்டு ஏப்., 16ம் தேதி ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திய ரயில்வே துறை, உலகளவில் அதிக தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்திய ரயில்வேயில் தென்னக ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, சென்ட்ரல் ரயில்வே, கொங்கன் ரயில்வே என நான்கு பிரிவுகள் உள்ளன. தென்னக ரயில்வே கடந்த 1951ம் ஆண்டு ஏப்., 14ம் தேதி துவக்கப்பட்டது. இதில் 6,000 கி.மீ., தூரத்திற்கு ரயில் பாதை உள்ளது. இதில் 1,200 கி.மீ., தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதையும், 4,800 கி.மீ., தூரத்திற்கு அகல ரயில் பாதையும் உள்ளது.அகல ரயில் பாதைக்கு பயன்படுத்தும் ஒரு தண்டவாளம் 13 மீட்டர் நீளம், 676 கிலோ எடை கொண்டது. சில இடங்களில் 13 மீட்டர் நீளம், 780 கிலோ எடையுள்ள தண்டவாளம் பயன்படுத்துகின்றனர். ஒரு கி.மீ., தூரத்திற்கு சராசரியாக 77 தண்டவாளம் பயன்படுத்துகின்றனர். மீட்டர் கேஜ் பாதைக்கு பயன்படும் தண்டவாளம் 12 மீட்டர் நீளமுள்ளது. தற்போது பல இடங்களில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
தண்டவாளம் விரிசலுக்கு காரணம்: மழை மற்றும் குளிர் காலங்களில் தண்டவாளத்தில் விரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. குளிர்ச்சி அதிகம் இருந்தால் தண்டவாளம் விரிவடைந்து விரிசல் ஏற்படும். ரயில்கள் அதிகம் இயக்குவதாலும் தண்டவாளம் தேய்ந்து விரிசல் ஏற்படும். பல இடங்களில் பழைய தண்டவாளங்களை பயன்படுத்துவதாலும் விரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டுமே தண்டவாளங்களில் அதிகளவு விரிசல் ஏற்படும். சாதாரண நாட்களில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. சிலீப்பர் கட்டைகளால் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. தண்டவாளத்தின் மீது ஓடும் ரயில்களை பொருத்தே அதன் உறுதித் தன்மை மாறுபடும்.அதிக ரயில்கள் இயக்கும் போது தண்டவாளத்தின் தேய்மானம் அதிகமாகும். சராசரியாக ஏழு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டவாளம் எந்த பிரச்னையுமின்றி நன்றாக இருக்கும். அதன் பிறகு விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட தண்டவாளத்தின் மீது 20 ஜி.எம்.டி., (கிராஸ் மில்லியன் டன்) அளவிற்கு ரயில் போக்குவரத்து நடந்து தண்டவாளத்தை மாற்றாமல் இருந்தாலும் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த 20 ஜி.எம்.டி.,யை கடக்க சில இடங்களில் 15 ஆண்டுகள் வரை ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னை - திருச்சி மார்க்கத்தில் தினமும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதை கணக்கிட்டால் 20 ஜி.எம்.டி.,யை விட அதிகமாக ரயில் போக்குவரத்து நடந்திருக்கும். சென்னை - திருச்சி மார்க்கத்தில் 1997ம் ஆண்டு முதல் அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 13 ஆண்டுகளாக ரயில்கள் செல்வதால் பல இடங்களில் தண்டவாளத்தின் தன்மை மாறியிருக்கும். இந்த மார்க்கத்தில் விரிசல்கள் ஏற்பட்ட பல இடங்களிலும் பழைய தண்டவாளமே இருக்கிறது.
புதிய தண்டவாளங்கள் மாற்றும் பணி நடந்து பல ஆண்டுகள் ஆகின்றன.தண்டவாளம் பராமரிப்பு பணியில் ரயில்வே ஊழியர்களின் பங்கும் முக்கியமானது. தண்டவாளங்களில் விரிசல்களை கண்காணிக்கும் பணி ரயில்வே ஸ்டேஷன்களில் பணிபுரியும் கீமேன் என்பவரைச் சேரும். இவருக்கு கீழ் எட்டு டிராக்மேன்கள் இருப்பர். இக்குழுவினருக்கு கீமேன் பணி ஒதுக்கீடு செய்து கண்காணிக்க வேண்டும்.இக்குழுவினர் ஒரு ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ., தூரத்திற்கு எல்லை வரையறை செய்து, தண்டவாள பாதை வழியாக ரயில்கள் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடந்து சென்று தண்டவாளத்தின் தன்மையை கண்காணிக்க வேண்டும்.
ஆனால் இவர்களுக்கு பனிக்காலங்களில் தான் இரவு நேரங்களில் "டிராக்' கண்காணிப்பு பணி வழங்கப்படுகிறது. அதிக மழை பெய்யும் நாட்களிலும் கண்காணிப்பு பணி இருக்கும். மற்ற நாட்களில் எங்காவது தண்டவாள விரிசல் ஏற்பட்டால் மட்டுமே பணி இருக்கும். ரயில்வே துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் பல இடங்களில் டிராக் மேன் பணிக்கு ஆட்களே இல்லை.தண்டவாளம் கண்காணிப்பு பணியை அனைத்து நாட்களிலும் செய்தால் இப்பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. தண்டவாளத்தின் தன்மையை அதிகாரிகள் தலைமையில் அடிக்கடி ஆய்வு செய்து பழைய தண்டவாளங்களை உடனுக்குடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தண்டவாள விரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.