Sunday, November 8, 2009

தமிழகத்தில் மழைக்கு 27 பேர் பலி : ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு


சென்னை : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழைக்கு, இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் முக்கிய அணைகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலில் கிழக்கிலிருந்து மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "கடந்த நான்கு நாட்களாக குமரி கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால், தமிழகத்தில் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்குக்கு மழை நீடிக்கும்' என்றார்.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் சீர்காழி, சிவகிரியில் அதிகபட்சமாக 24 செ.மீ., கேத்தி 21, குன்னூர், கூடலூர் 19, பரங்கிப்பேட்டை, கொள்ளிடம் 18, சிதம்பரம் 17, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, செம்பரம்பாக்கம், காட்டுமன்னார்கோவில், கொடைக்கானல் 15, உத்தமபாளையம், ராஜபாளையம் 14, பொன்னேரி 13, சென்னை, தாம்பரம், புதுச்சேரி, நன்னிலம், திருவாரூர் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் 11 செ.மீ., மழை பெய்திருக்கிறது.

குடவாசல், சங்கரன்கோவில், பெரியார் அணை, ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர், ஊட்டி ஆகிய இடங்களில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.தேனி மாவட்டத்தில் உள்ள பெரியார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. வைகை அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.

பலி 27: தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை மழையால் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கனமழைக்கு திருநெல்வேலி, விழுப்புரத்தில் தலா ஆறு பேரும், கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் தலா இருவரும், மதுரை, திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகரில் தலா ஒருவரும் என 27 பேர் பலியாகியுள்ளனர்.

ஊட்டி- குன்னூர் ரோட்டில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பபட்டுள்ளது. நீலகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். 19 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி இரண்டாவது நாளாக நேற்றும், மாநிலத்தில் மழை நிலவரம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பல்வேறு துறைகளின் செயலர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது . சென்னையில் கடந்த இரு நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், நேற்று சிறிது இடைவெளி காணப்பட்டது.