திருவாரூர், நவ. 8: திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஏறத்தாழ 4,000 ஹெக்டேரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் அதிக அளவில் மழை பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகள் வருமாறு (அளவு மில்லி மீட்டரில்): நன்னிலம் -120, திருவாரூர் -118, குடவாசல் -105.4, வலங்கைமான் -84.4, நீடாமங்கலம் -70, மன்னார்குடி -52, திருத்துறைப்பூண்டி -36, முத்துப்பேட்டை -27.8.
இந்த மழை காரணமாக திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கட்டிமேடு, பாண்டி, நுனாக்காடு, பாமணி, சிங்களாந்தி உள்ளிட்ட ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
இவை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீரில் மூழ்கியிருப்பதால், பயிர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் நீரில் மூழ்கிய பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வளவனாற்றுத் தலைப்பில் ஆகாயத் தாமரை செடிகள் ஆற்றை அடைத்துக் கொண்டிருப்பதால் தேங்கிய நீர் வெளியேற முடியாததுதான் வயல்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதற்குக் காரணம் என்கின்றனர் விவசாயிகள்.
திருவாரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மழை பெய்தது. பின்னர் பரவலாக அனைத்து இடங்களில் வெயில் அடித்தது.
-