நாமக்கல்: பொது வாழ்வில் இருப்போர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது சொத்து விபரப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டனர். அவர்களை தொடர்ந்து உத்தரபிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சங்கத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, உத்தர பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜயசங்கர் பாண்டே, மத்திய அரசின் கூடுதல் கேபினட் செயலாளர்களாக இருக்கும் சுனில்குமார், அவரது மனைவி ரேணுகா, டி.ஐ.ஜி., ஜஸ்பீர் சிங் ஆகியோர் சொத்து விபரப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று அவரது சொத்து விபரங்களை தேசிய தகவல் மையத்தில் வெளியிட்டுள்ளார். அதுகுறித்த விபரம் பின்வருமாறு:
மதுரை மாவட்டம், மதுரை தாலுகா அரபாளையம் கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் 7,172 ரொக்கப்பணம் உள்ளது. மேலும், எல்.ஐ.சி.,யில் கடன் உள்ளது. அந்த கடனை செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம், தமிழகத்தில் தனது சொத்து விபரப் பட்டியலை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது